Published : 11 Feb 2023 06:15 AM
Last Updated : 11 Feb 2023 06:15 AM
சென்னை: மத்திய வருவாய் துறையின் 34-வது கலாச்சாரத் திருவிழாவை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கிவைத்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழாஅரங்கில், மத்திய வருவாய்த் துறையின் 34-வது அகில இந்திய கலாச்சார திருவிழா நேற்று தொடங்கியது. இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. தலைமை வகித்து, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
இதில், மத்திய சரக்குகள், சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி ஆணையர் தமிழ்வளவன், முதன்மை ஆணையர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ், மத்திய மறைமுக வரிகள் வாரிய உறுப்பினர் வி.ரமா மேத்யூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கலாச்சாரத் திருவிழா நாளை (பிப்.12) வரை நடைபெறுகிறது.
19 கலைப் போட்டிகள்: நாடு முழுவதும் உள்ள, 300-க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி, வருமான வரித் துறை அலுவலர்கள் பங்கேற்று, இசை, நடனம், நாடகம் போன்ற 19 வகையான கலைப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சியில் இளையராஜா பேசும்போது, “ஒரு சிற்பி கல்லை செதுக்கும்போது, எவ்வாறு தேவையற்ற கற்களை அகற்றி உருவத்தைபடைக்கிறாரோ, அதேபோல இசையில் தேவையற்ற இசைக்குறிப்புகளை நீக்க இசையமைப்பாளர் தெரிந்திருக்கவேண்டும். இந்த கலாச்சாரத் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
விழா குறித்து மத்திய மறைமுக வரிகள் வாரிய உறுப்பினர் வி.ரமா மேத்யூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: கலாச்சாரத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கலாச்சாரத் திருவிழா, வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்ட சென்னையில் நடைபெறுகிறது. ஏற்கெனவே மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், இங்கு நடைபெற உள்ள பாரம்பரிய இசை, நாடகம், பல்வேறு மொழிப் பாடல்கள், நடனம்ஆகிய போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
மகிழ்ச்சியான அனுபவம்: இதில் வெற்றி, தோல்வி என்பதுஇல்லை. இதனால் கிடைக்கும்மகிழ்ச்சியான அனுபவமே முக்கியமானது. இளையராஜாவைப் போன்ற சிறந்த கலைஞர், இந்த திருவிழாவைத் தொடங்கி வைத்திருப்பது எங்களுக்கு பெருமையான தருணமாகும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, மத்திய சரக்குகள் மற்றும் சேவை வரி சார்பில் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT