Published : 10 Feb 2023 08:54 PM
Last Updated : 10 Feb 2023 08:54 PM

2002-ன் அறிவிப்பாணையின்படி பணியில் சேர்ந்த ஆண் காவலர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் முன் நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கடந்த 2003-ம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வுதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. 2003 ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கபட்ட அனைத்து ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டமே பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கபட்டது. கடந்த 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரும்படி உத்தரவிடக் கோரி சிவசக்தி உள்ளிட்ட 25 காவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரகள் தரப்பில், 2002-ம் ஆண்டு 3,500 காவலர்கள் தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட்ட தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வாதிடப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், 2002ம் ஆண்டு தேர்வு நடைமுறைகள் துவங்கியிருந்தாலும், 2003 நவம்பர் மாதம் தான் மனுதாரர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் தான் அவர்களுக்கு பொருந்தும். பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெற அவர்களுக்கு தகுதியில்லை என வாதிடபட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை மூலம் பெண் காவலர்கள், ஓராண்டிற்குள்ளாகவே பணி நியமனம் வழங்கபட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பலன் பெறும் நிலையில், அதே காலகட்டத்தில் தேர்வு நடைமுறைகளை சந்தித்த ஆண் காவலர்களையும் சமமாக பாவிக்க வேண்டும். ஆண் காவலர்கள் நியமனத்திற்கு 11மாதங்கள் தாமதமானதற்கு அவர்கள் காரணமல்ல. எனவே அவர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

மேலும், இவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கும் நடைமுறைகளை அரசு 12 வாரங்களில் முடிக்க வேண்டும்" என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x