Published : 10 Feb 2023 05:36 PM
Last Updated : 10 Feb 2023 05:36 PM
சென்னை: “பேனாவிற்கு எப்படி சக்தி இருக்கிறதோ, அதுமாதிரி புகைப்படத்திற்கும் சக்தி இருக்கிறது. நான் சொல்கிற பேனா எந்தப் பேனா என்று உங்களுக்குத் தெரியும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை - லலித் கலா அகடாமியில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "ஏற்கெனவே 2006-ம் ஆண்டு கருணாநிதியால் தொடங்கப்பட்ட இந்த தமிழ்நாடு புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் புகைப்பட கண்காட்சியினுடைய தொடக்க விழாவில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று அந்த புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கக் கூடிய புகைப்படங்களை எல்லாம் பார்த்து அதில் புதிய புதிய செய்திகள் மட்டுமல்ல, கடந்த வரலாற்று நிகழ்ச்சிகளையும் புரிந்து, அறிந்து, அதை மனதில் ஏற்றிக்கொள்ளக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு இன்றைக்கு எனக்குக் கிடைத்திருக்கிறது.
இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய நம்முடைய தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கெல்லாம் முதலில் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாள் ஒரு சிறப்பான நாள். அந்த சிறப்பான நாளில்தான் இன்றைக்கு இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. என்ன நாள் என்று கேட்டால் பேரறிஞர் அண்ணாவினுடைய மறைவிற்குப் பிறகு 1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தலைவர் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற நாள். அந்த நாளில் இந்த புகைப்படக் கண்காட்சி தொடங்கப்படுவது பொருத்தமாக அமைந்திருக்கிறது.
காரணம், நம்முடைய தலைவர் கருணாநிதிக்கும் பத்திரிகைக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பலமுறை சொல்லியிருக்கிறார், என்னுடைய மூத்த பிள்ளை யார் என்று கேட்டீர்களானால் முரசொலி தான் என்று பத்திரிகையைத்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. அப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடியவர் தலைவர் கருணாநிதி.
நம்முடைய இந்து ராம் இங்கு பேசுகிறபோது என்னைப் பற்றி பெருமையோடு பல்வேறு செய்திகளை குறிப்பிட்டுச் சொன்னார். நான் அவரோடு பல நேரங்களில் பழகியிருந்தாலும், பேசியிருந்தாலும், அவரைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தாலும் இப்போது சமீப ஆறு மாத காலமாக அவரை தினந்தோறும் சந்திக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்று வருகிறேன். எங்கு என்று கேட்டால், நடைப்பயிற்சியில், காலையில். நான் நடைப்பயிற்சிக்கு செல்கிறேன், எனக்கு பல்வேறு பயிற்சிகளை அவர் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதுதான் உண்மை.
இந்தப் பெருமை எனக்கெல்லாம் இப்போது அதிகமாக சேருகிறது என்றால், அதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கிறீர்கள் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அப்படிப்பட்ட நிலையில், இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்களை சந்திப்பதில் நான் மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியடைகிறேன்.
செய்திகளை படித்து அறிந்து கொள்வதைவிட, புகைப்படத்தை பார்த்தாலே பல செய்திகளை அறிந்துகொள்ளக்கூடிய நிலை இன்றைக்கு இருக்கிறது. ஆகவேதான், புகைப்படத்தை பார்த்தவுடனே பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளை தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பேனாவிற்கு எப்படி சக்தி இருக்கிறதோ அதுமாதிரி புகைப்படத்திற்கும் சக்தி இருக்கிறது. நான் சொல்கிற பேனா எந்தப் பேனா என்று உங்களுக்குத் தெரியும்.
அப்படிப்பட்ட நிலையில், பேனாவிற்கும் புகைப்படத்திற்கும் பல தொடர்புகள் உண்டு, பல சக்திகள் உண்டு. அந்த வகையில் ஒரு சக்தி வாய்ந்த நிலையிலேதான் அந்தப் புகைப்படங்களையெல்லாம் பார்க்கிறபோது அது உயிரோட்டமாகவே இருக்கிறது. நடந்த சம்பவங்களை அப்படியே எடுத்து வெளியிடக்கூடிய நிலையில் அதைப் பார்த்தவுடனே, என்ன நடந்திருக்கிறது? என்ன செய்தி அது? என்ன சம்பவம் எது? எப்படிப்பட்ட நிலையில் நடந்திருக்கிறது? என்பதை மிகவும் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அந்த புகைப்படங்களை எடுப்பது என்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்று.
நான் தினந்தோறும் நம்முடைய இந்து ராமோடு நடைப்பயிற்சி செல்லுகிற நேரத்தில், அவரும் ஒரு மிகச்சிறந்த புகைப்படக்காரர் என்பதை நான் தெரிந்து கொண்டேன். எப்படி என்று கேட்டீர்களானால், ஒரு செல்போனை வைத்திருப்பார், எங்கேயாவது ஒரு பறவை வந்தது என்றால், உடனே புகைப்படம் எடுக்க ஆரம்பித்து விடுவார். சில நேரங்களில் அங்கே பணியாற்றக்கூடிய ஊழியர்கள், எங்களோடு செல்பி எடுக்க வேண்டும் என்று வந்து நிற்பார்கள், உடனே இவர்தான் கேமராமேன் ஆக ஆகிவிடுவார்.
ஒருசில நேரங்களில் ஐ.ஐ.டி-யில் நடைப்பயிற்சி செல்வோம். அங்கு சில நேரங்களில் மான் வரும், அதை படம் எடுத்துக் கொண்டிருப்பார். அவரும் புகைப்படத்தில் ஒரு பெரிய நிபுணராக இருக்கக்கூடியவர் என்பதை நான் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். புகைப்படம் என்பது எல்லோராலும் சுலபமாக எடுத்துவிட முடியாது. அதற்கென்று நிபுணர்களாக, அதற்கென்று பயிற்சியைப் பெற்று, அந்த உணர்வோடு எடுக்கக்கூடிய நிலையில் இருந்தால்தான் அதை எடுக்க முடியும். அந்த நிலையில் இன்றைக்கு இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை எல்லாம் நான் பார்த்தேன். உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.
அதே நேரத்தில் இந்த சங்கத்தின் சார்பில், வீட்டுமனை குறித்து ஒரு கோரிக்கையை என்னிடத்தில் வைத்திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கை எல்லா நிலையிலும், முடிவடைந்து வெளியிடப்படக்கூடிய நிலையில் இருக்கிறது. எனவே நீங்கள் உடனடியாக முடித்து தர வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக, உறுதியாக இந்த ஆட்சியைப் பொறுத்தவரைக்கும், சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும்.
ஏற்கனவே, இந்த ஆட்சி வந்த பிறகுதான் பத்திரிகை நல வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நிச்சயமாக உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும், அவற்றை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கையை நிச்சயமாக நாங்கள் எடுப்போம் என்ற அந்த நம்பிக்கையை, உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இந்தச் சிறப்பான பணியில் ஈடுபட்டதில் வெற்றி கண்டிருக்கக்கூடிய இந்த அமைப்பைச் சார்ந்திருக்கக்கூடிய நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து, உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகிறேன்" என்று முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...