Published : 10 Feb 2023 04:11 PM
Last Updated : 10 Feb 2023 04:11 PM
சென்னை: 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தான் வெளியிட்ட 64 அறிவிப்புகளின் நிலை என்ன என்பது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 2016-ம் ஆண்டில் இருந்து ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தது. எனவே, மாநகராட்சி ஆணையர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு. அவரின் கீழ் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். கடந்த 2022-ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியில், திமுக, பெரும்பான்மை இடங்களை வென்றது. சென்னை மாநகராட்சி மேயராக கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி ஆர்.பிரியா பதவியேற்றுக் கொண்டார்.
அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே, 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மேயர் பிரியா ராஜன் 64 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், 2023 -24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தற்போது மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட 64 அறிவிப்புகளின் நிலை என்ன என்பது குறித்து ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு மேயர் பிரியா ராஜன் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது:
கல்வித் துறை: “பாலின சமத்துவத்தை புரிந்துகொள்ள சென்னைப் பள்ளிகளில் பாலினக் குழுக்கள், சென்னைப் பள்ளிகளில் ரூ.5.47 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள், சென்னைப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி, பள்ளிகளில் இளைஞர் நாடாளுமன்றக் குழுக்கள் உட்பட 16 அறிவிப்புகள் கல்வித் துறையில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் அனைத்து அறிவிப்புகளும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.
பொது சுகாதாரத் துறை: சாலையில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தங்கவைக்க ஒருங்கிணைந்த திட்டம், மருத்துவமனைகளில் புறநோயாளிகளின் எண்ணிக்கையை 10 சதவீதம் உயர்த்துதல், 3 வீடற்றவர்களுக்கான காப்பகங்கள் அமைத்தல் உள்ளிட்ட 8 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் வீடற்றவர்களுக்கான காப்பகங்கள் திட்டம் மட்டும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மீதம் உள்ள அனைத்து திட்டங்களும் நடைமுறைக்கு வந்துவிட்டன.
திடக்கழிவு மேலாண்மை: மாநகரில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொண்டு மாதம் 100 டன் அளவு உரம் தயாரித்து சந்தைப்படுத்துதல், கழிவுகள் கொண்டு உயிரி எரிவாயு (bio-gas) உற்பத்தி செய்ய புதிதாக 6 நிலையங்கள் அமைத்தல் என்று திடக்கழிவு மேலாண்மை துறையில் 9 அறிவிப்புகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன.
பேருந்து சாலைகள் துறை: மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர சாய்தளப் பாதை அமைத்தல், 26 இடங்களில் செயற்கை நீருற்றுகள் அமைத்தல் உள்ளிட்ட 4 அறிப்புகள் இந்த துறையில் வெளியிடப்பட்டன. இவற்றில், தனியார் பங்களிப்புடன் 1000 பேருந்து நிழற்குடைகள் அமைத்தல் என்ற அறிவிப்பு மட்டும் தற்போது தொடக்க நிலையில் செயல்பாட்டில் உள்ளது.
மழைநீர் வடிகால் துறை: இந்தத் துறையில் 7 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவற்றில் ரூ.143 கோடியில் 5 பெரிய குளங்கள் சீரமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த 5 குளங்களும் வேண்டாம் என்று முடிவு செய்து, வேறு 5 குளங்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
பூங்கா துறை: சென்னையில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களை பராமரிக்கவும் மேம்படுத்த ரூ.16.35 கோடி நிதி, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடுதல் என்று பூங்கா துறை சார்பில் வெளியிடப்பட்ட 3 அறிவிப்புகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன.
கட்டிடம்: தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நிர்பயா திட்ட நிதிகளை கொண்டு 366 இடங்களில் உள்ள 918 கழிப்பிட இருக்கைகள் மற்றும் 671 சிறுநீர் கழிப்பான்கள் 36.34 கோடி செலவில் மறு சீரமைக்கப்படும் என்ற திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
தகவல் தொழில் நுட்பம்: டிஜி லாக்கர் (Digi locker) வழியாக வர்த்தக உரிமங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி, தானியங்கி கருவி மூலம் சொத்து வரி செலுத்த ஏற்பாடு, சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க, e-office நவீன QR குறியீட்டினை பயன்படுத்தி பொதுமக்கள் சொத்து வரி செலுத்த வழிவகை, நம்ம சென்னை செயலி புதிய வசதிகள் என்ற 7 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இவற்றில் தானியங்கி கருவி மூலம் சொத்து வரி செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்ற அறிவிப்பு தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை. விரைவில் நடைமுறைக்கு வரும்” என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT