Published : 10 Feb 2023 03:13 PM
Last Updated : 10 Feb 2023 03:13 PM
ஈரோடு: "எத்தனை முகமூடிகளைப் போட்டுக்கொண்டு ஈரோடு தேர்தல் களத்துக்கு வந்தாலும் இந்த ஈரோட்டு பூகம்பத்தில் அதிமுக இருக்கக்கூடிய இடம் தெரியாமல் மறையும் என்பது உறுதி" என்று தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
ஈரோட்டில் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "நேற்று ஈரோட்டில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை என்ற பெயரிலே, பச்சைப் பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார். கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் ஒரு பகுதியில் அவரும் முதல்வராக இருந்திருக்கிறார். இந்த பத்தாண்டுகளில் எந்தவொரு சாதனையும் செய்து முடிக்காதவர் எடப்பாடி பழனிசாமி.
பதவியில் இருந்த காலத்தில், அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும், இயக்கத்தினரும் செய்துள்ள துரோகங்களைப் பட்டியலிட்டால் அவை நீண்டுகொண்டே போகலாம். ஊழலைப் பற்றி பேச என்ன அடிப்படை நியாயம் இவர்களிடம் இருக்கிறது. கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் என்ற அடிப்படையில் நடந்துவந்த அந்த ஆட்சி இதற்காகத்தான் வீட்டிற்கு அனுப்பப்பட்டது.
நீங்கள் எத்தனை முகமூடிகளைப் போட்டுக்கொண்டு ஈரோடு தேர்தல் களத்துக்கு வந்தாலும் இந்த ஈரோட்டு பூகம்பத்தில் அதிமுக இருக்கக்கூடிய இடம் தெரியாமல் மறையும் என்பது உறுதி. மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி தக்க பாடத்தை அதிமுகவுக்குப் புகட்டும்" என்றார்.
அப்போது 20 அமைச்சர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "ஏற்கெனவே நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடந்தபோது அதிமுக அமைச்சர்கள் யாரும் வராமல் இருந்தார்களா, ஆர்கே நகரில் தேர்தல் நடந்தபோது அதிமுக அமைச்சர்கள் யாரும் வராமல் இருந்தார்களா, இப்படியெல்லாம் கூறுவது என்பது மக்களை திசைத்திருப்பும் ஒரு முயற்சி.
எல்லா தவறுகளையும், எல்லா குற்றங்களையும் தங்களுடைய ஆட்சிக் காலத்திலே செய்துவிட்டு, தற்போது அந்த தவறுகளை நாங்கள் செய்திருப்பதாக பழிசுமத்தப் பார்க்கின்றனர்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. யார் கட்சித் தலைமைக்கு அதிகமாக நிதி கொடுக்கிறார்களோ, அவர்கள் சிறந்த அமைச்சர் என பாராட்டப்படுகின்றனர்” என்றார். அதன் விவரம்: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிகாரிகள் எதிரிகளாக செயல்பட்டால் எதிர்வினையை சந்திப்பீர்கள் - பழனிசாமி எச்சரிக்கை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT