Published : 10 Feb 2023 02:25 PM
Last Updated : 10 Feb 2023 02:25 PM

அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகளைக் கடந்தும் டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கான முன்னெடுப்புகள் இல்லை!

திருவாரூர்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து 2 ஆண்டுகளைக் கடந்தும், டெல்டா மாவட்டங்களில் அதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் நடைபெறவில்லை என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைத்து, செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் விவசாயத் தொழிலுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று, 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார்.

இதன் மூலம் புதிதாக எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தையோ, எண்ணெய் எரிவாயு திட்டத்தையோ டெல்டா மாவட்டங்களில் இனி செயல்படுத்த முடியாது என்றும், விவசாயம் சார்ந்த தொழில்கள், அதைச் சார்ந்த வேலைவாய்ப்புகள் டெல்டாவில் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்காக, விவசாயிகளை உள்ளடக்கிய மாநில அளவிலான வல்லுநர் குழுவையும் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், அந்தக்குழு அறிவிப்பு நிலையிலேயே இருந்ததே தவிர, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவே இல்லை. இதைத் தொடர்ந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட பகுதியின் எம்எல்ஏக்களையும் உறுப்பினர்களாக சேர்த்து, குழு மாற்றி அமைக்கப்பட்டது.

அதைத் தவிர வேறு எந்தவொரு நடவடிக்கையையும் அரசு அறிவிக்கவில்லை. “டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் எரிவாயு திட்டங்கள் முற்றிலும் செயல்படக் கூடாது. வேளாண் சார்ந்த தொழிற்கூடங்களை ஏற்படுத்தி, இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்” என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் விவசாயிகள், இந்த எதிர்பார்ப்புகளை தமிழக அரசு இதுவரை பூர்த்தி செய்யவில்லை என தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் வ.சேதுராமன் கூறியதாவது: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, டெல்டா மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய வேளாண் சார்ந்த தொழிற்கூடங்களைக் கொண்டுவர வேண்டும்.

வேளாண் உற்பத்திப் பொருட்களை மதிப்புக் கூட்டல் செய்து விற்பதற்கும், அதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் பயிற்சி அளிக்க வேண்டும். ட்ரோன் மூலமாக மருந்து தெளிக்கும் பயிற்சி மையத்தை உருவாக்கி, இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து விவசாய நிலங்களிலும் மண் ஆய்வு செய்து, நிலத்தின் தரத்தை மேம்படுத்த திட்டம் அறிவிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.

ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை. தற்போதைய திமுக ஆட்சியில் இதுவரை அதற்கான எந்த முன்னெடுப்பும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. தமிழக முதல்வர் இது குறித்து உரிய கவனம் செலுத்துவதுடன், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்காக அறிவிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் செயல்பாடுகளையும் முடுக்கி விட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் தம்புசாமி கூறியபோது, “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தில் மாவட்ட அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும். எம்எல்ஏக்களும், உயர் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ள அந்தக் குழுவில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விவசாயிகள் இடம்பெற வேண்டும்.

அந்தக் குழுக்கள் மாவட்ட அளவில் உள்ள பிரச்சினைகள், தேவைகளைக் கூடி விவாதித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றால் டெல்டா மாவட்டங்கள் முன்னேற்றம் அடையும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x