Published : 10 Feb 2023 02:40 PM
Last Updated : 10 Feb 2023 02:40 PM

“எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை பிரதமர் மோடி பேசாதது ஏன்?” - ப.சிதம்பரம் பதிலடி

ப.சிதம்பரம் | கோப்புப்படம்

சிவகங்கை: "தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநில அரசுகளை நீக்குவது கிடையாது. எதிர்க்கட்சியில் இருக்கின்ற எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிடுகின்றனர். ஓர் அரசை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. இவர்கள் விலைக்கு வாங்குகின்றனர்" என்று பிரதமர் மோடிக்கு, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பதிலடி தந்துள்ளார்.

சிவகங்கையில் அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அது உரை இல்லையே. ஏச்சு உரைதானே. எல்லோரையும் ஏசினார். குறிப்பாக, எதிர்க்கட்சிகளை ஏசினார்" என்றார்.

அப்போது அவரிடம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசின் ஆட்சிகள் கலைக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லையே. அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை பயன்படுத்தினார்கள். அதை தவறாக பயன்படுத்தியிருந்தால், அந்த அரசை மக்கள் அன்றைக்கே தண்டித்திருப்பார்கள்.

எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகுதான், ஒரு அரசை நீக்குவதற்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்பிறகு இருந்த அரசுகள் எந்தளவுக்கு அரசியல் சாசனத்தை பின்பற்றியிருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநில அரசுகளை நீக்குவது கிடையாது. எதிர்க்கட்சியில் இருக்கின்ற எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிடுகின்றனர். ஓர் அரசை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. இவர்கள் விலைக்கு வாங்குகின்றனர். அண்மையில் விலைக்கு வாங்கியது கோவாவில். அங்குள்ள 12 காங்கிரஸ் உறுப்பினர்களில் 8 பேரை விலைக்கு வாங்கினர். ஆபரேஷன் கமல், ஆபரேஷன் லோட்டஸ் என்பதே எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது. சட்டப்பிரிவு 356 பற்றி பேசியவர் அதைப்பற்றியும் சொல்லியிருக்க வேண்டுமா? இல்லையா?" என்று அவர் கூறினார்.

முன்னதாக, “மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது 90 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாஜக மீது சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரைகள் மலரும்” என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம்: சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரைகள் மலரும் - மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி முழு பலத்தையும் காட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம், "எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அஇஅதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. தைரியமாக போட்டியிட வேண்டியதுதானே. எதற்காக புகார் சொல்லிக்கொண்டுள்ளனர். ஆளுங்கட்சி சந்திக்கின்ற முதல் இடைத்தேர்தலில் அரசு சும்மாவா இருக்கும். தன்னுடைய முழு பலத்தையும் காட்டத்தானே செய்வார்கள். அதிமுக ஆட்சியில் இடைத்தேர்தல் வந்தபோது அமைச்சர்கள் எல்லாம் வீட்டிலேயே இருந்தார்கள்?" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x