Published : 10 Feb 2023 01:51 PM
Last Updated : 10 Feb 2023 01:51 PM
கும்பகோணம்: கும்பகோணம் பாபுராஜபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கின்றனர்.
இங்கு பாபுராஜபுரம், புனியஞ்சேரி, திம்மக்குடி, மைனாஊர், மேலக்கொட்டையூர், கிழக்கொட்டையூர் உள்ளிட்ட 7 கிராமங்களில் சுமார் 1500 ஏக்கர் சம்பா-தாளடி நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைப்பணி சுமார் 30 சதவீதம் அளவில் நடைபெற்று வரும் நிலையில், பாபுராஜபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் நுகர்பொருள்வாணிபக்கழக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
அதன்படி கடந்த மாதம் 30-ம் தேதி கொள்முதல் செய்வதற்கான அனைத்து இயந்திரங்களும் அங்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் கடந்த 10 நாட்களாக கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் 3 ஆயிரம் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வதற்காக காத்திருக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாபுராஜபுரத்தில் நேரடி நெல் கொள் முதல் நிலையத்தைத் திறந்து போர்க்கால அடிப்படையில் நெல் மூட்டைகளை கொள் முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறியது,
"இப்பகுதியிலுள்ள கிராமங்களில் அறுவடை தொடங்கியதும், கடந்த மாதம் கும்பகோணத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநரிடம், கொள்முதல் நிலையத்தைத் திறக்கக்கோரி மனு அளித்தோம். அவரும் கடந்த மாதம் 23-ம் தேதி இங்குக் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பக் கழகத்திற்குக் கடிதம் அனுப்பினார். அதன்படி கடந்த மாதம் 30-ம் தேதி எடை மற்றும் ஈரப்பத இயந்திரம், சாக்குகள், சணல்கள் உள்ளிட்ட அனைத்தும் இயந்திரங்களும் அங்கு வந்துவிட்டன. இதனை நம்பி விவசாயிகள் சுமார் 3000 நெல் மூட்டைகளை அங்குக் கொண்டு வந்து காத்துக்கிடக்கின்றனர். ஆனால் கொள்முதல் நிலையம் திறக்காதது குறித்து, அலுவலர்களிடம் கேட்ட போது, ஆட்கள் பற்றாக்குறை எனக் கூறுகின்றனர்.
அண்மையில் பெய்த மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்தால், அங்குள்ள 3 ஆயிரம் நெல் மூட்டைகளின் நிலை கேள்வி குறியாகும். இதே போல் அங்கு இடப்பற்றாக் குறையினால், வயலிலேயே நெல் மூட்டைகளை வைத்துக் கொண்டு, கூலி ஆட்கள் மூலம் பாதுகாத்து வருகின்றனர். அண்மையில் தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர், தஞ்சாவூர் மாவட்டத்தில் தேவைப்படும் பகுதியில் கொள்முதல் நிலையம் உடனடியாக திறக்கப்படும், போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற தெரிவித்தார்"என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறந்து போர்க்கால அடிப்படையிலும், ஞாயிற்று கிழமைகளிலும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நுகர்பொருள் வாணிப்பக் கழக துணை மேலாளர் சி.இளங்கோவன் கூறியது: கொள்முதல் நிலையத்தை பல்வேறு காரணங்களால் திறக்கமுடியவில்லை. ஒரே அலுவலர் 2 கொள்முதல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றார். பாபுராஜபுரத்தில் உடனடியாக திறக்கப்பட்டு, நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT