Published : 10 Feb 2023 01:17 PM
Last Updated : 10 Feb 2023 01:17 PM
தஞ்சாவூா்: சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட மாடுகளுடன் உரிமையாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபாரதம் விதிக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி கடந்த 1-ஆம் தேதி முதல் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி தொடங்கியது. பிடிப்படும் மாடுகள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டன. அதன் உரிமையாளர்கள் மாடு ஒன்றுக்கு ரூ. 3000 யும், கன்றுகளுக்கு 1500 ரூபாயும் அபராதம் செலுத்திய பிறகு மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில் மாடுகள் பிடித்து அபராதம் விதிக்கப்படுவதால் பாதிக்கப்படுகிறோம் எனக் கூறி இன்று (பிப். 10) 50-க்கும் மேற்பட்ட மாடுகளுடன் அவற்றின் உரிமையாளர்கள் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு அண்ணா சிலை அருகே திரண்டனர்.
பின்னர் அங்கு மாடுகளுடன் நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் நித்யா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீஸாரிடம் மாடுகளின் உரிமையாளர் பேசும்போது, ”தஞ்சாவூர் மாநகராட்சியில் மட்டும் 3000-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. நாங்கள் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து அவற்றின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது சுற்றி திரியும் மாடுகள் பிடித்து அபராதம் விதிக்கப்படுவதால் எங்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மேய்ச்சலுக்காக சாலைகளில் கால்நடையாக செல்லும் மாடுகளை பிடிக்கக்கூடாது. இரவு நேரங்களில் சுற்றி திரியும் மாடுகளை வேண்டுமானால் பிடிக்கலாம். அந்த காலத்தில் மேய்ச்சலுக்காக தரிசு நிலம் இருந்தது. தற்போது அவை கிடையாது. எனவே மேய்ச்சலுக்கு நிலம் ஒதுக்கி தர வேண்டும். தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்” என்று மாடுகள் வளர்ப்போர் கூறினர்.
இதையடுத்து உங்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுங்கள். தற்போது கலைந்து செல்லுங்கள் என போலீஸார் எடுத்துக் கூறினர். இதனை ஏற்றுக் கொண்டு உரிமையாளர்கள் தங்களது மாடுகளை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT