Published : 10 Feb 2023 11:06 AM
Last Updated : 10 Feb 2023 11:06 AM

ஆன்லைன் சூதாட்டத்தை 162-வது பிரிவின் படி தமிழக அரசு தடை செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் 

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: அரசியலமைப்புச் சட்டத்தின் 162-வது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ரியாஸ்கான் என்ற இளைஞர், செல்பேசி கடையில் பணியாற்றி ஈட்டிய வருமானம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் மனம் உடைந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரும் நிலையில், அதற்கு முடிவு கட்டுவதற்கான ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் இன்று வரை முன்வராதது கண்டிக்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வது இது முதல்முறையல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 60-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், பா.ம.கவின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவே 2020-ம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டமும், 2021-ம் ஆண்டில் சட்டமும் இயற்றப்பட்டன.

ஆனால், 2021-ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இன்று வரை 44 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நூறைக் கடந்து விட்டது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டம் கடந்த அக்டோபர் 18-ம் நாள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 116 நாட்கள் நிறைவடைந்து விட்டன. இவ்வளவுக்கு பிறகும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் தாமதம் செய்வது, ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிப்பதற்கு இணையானதாகும். ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் மறுப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. தடை சட்டம் தொடர்பாக ஆளுனர் எழுப்பிய 3 ஐயங்களுக்கு கடந்த நவம்பர் 25-ம் நாள் தமிழக அரசு விளக்கம் அளித்து விட்டது. அதன்பின் திசம்பர் ஒன்றாம் நாள் சட்ட அமைச்சர் இரகுபதி, ஆளுனரை சந்தித்து மீண்டும் விளக்கம் அளித்ததுடன், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பின்னர் 72 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் அமைதி காப்பது சரியல்ல.

இதற்கிடையே, புதிய திருப்பமாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்குத் தான் முழுமையான அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் 34-ஆவதாக ‘‘பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல்’’ என்ற பொருள் இடம் பெற்றுள்ளது. அதனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்றலாம் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, 162-வது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நிர்வாக அதிகாரமும் மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளாக பா.ம.க முன்வைத்து வரும் வாதங்கள் தான். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தில் பா.ம.க.வின் நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை மத்திய அரசின் பதில் உறுதி செய்திருக்கிறது.

மத்திய அரசின் விளக்கத்திற்குப் பிறகும், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் ஆளுனர் காலந்தாழ்த்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். அந்த சட்டம் இனி ஒரு நாள் கூட ஆளுனர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சரியாக இருப்பதாக கருதினால் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்; இல்லா விட்டால், அதற்கான காரணங்களைக் கூறி சட்டத்தை சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது அரசியலமைப்பு சட்டத்தின் 162வது பிரிவின்படி மாநில அரசின் நிர்வாக வரம்புக்குள் வருவதாக மத்திய அரசே அறிவித்திருக்கிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்காவிட்டால், 162வது பிரிவை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். " இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x