Published : 10 Feb 2023 06:37 AM
Last Updated : 10 Feb 2023 06:37 AM
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை வரும் 16-ம் தேதி முதல் 27-ம் தேதி மாலை 7 மணி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். இந்த தேர்தலில்,வாக்குப்பதிவுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடவும், பரப்பவும் தேர்தல் ஆணையம் வரையறைகளை வகுத்துள்ளது.
அதன்படி, வரும் 16-ம் தேதிகாலை 7 மணி முதல், வாக்குப்பதிவு நாளான 27-ம் தேதி மாலை 7 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது, வெளியிடுவது, பரப்புவது தடை செய்யப்படுகிறது.
விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர பேச்சாளர்கள்: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளிடையே 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. இக்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக 409 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, திமுகவில் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கும், காங்கிரஸ் கட்சியில் 35 பேருக்கும், அதிமுகவில் 40 பேருக்கும், நாம்தமிழர் கட்சியில் 20 பேருக்கும், தேமுதிகவில் 40 பேருக்கும் என 409 நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT