Published : 10 Feb 2023 05:07 AM
Last Updated : 10 Feb 2023 05:07 AM

தொழில்நுட்ப கோளாறால் ஆதாரை இணைக்க முடியாமல் தவிக்கும் மின் நுகர்வோர் - 90% பேர் இணைத்துவிட்டதாக அமைச்சர் கூறுவது சரியா?

மதுரை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடிகள் நீடிப்பதால் பொதுமக்கள் தவிக்கின்றனர். அதனால், 90 சதவீதம் பேர் ஆதாரை இணைத்துவிட்டனர் என்று மின்துறை அமைச்சர் கூறுவது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் பெறும் இணைப்புகளைச் சேர்த்து 2.67 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். மின் நுகர்வோர் அனைவரும் தங்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது.

இதையடுத்து மக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கடந்த ஆண்டு நவ.28 முதல் இணைத்து வருகின்றனர்.

தொடக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. 100 யூனிட் இலவசம் ரத்தாகுமா? என மின்நுகர்வோர் குழப்ப நிலையில் இருந்தனர். பல வீடுகளை வைத்திருப்போர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் ஒரு வீடு தவிர மற்ற வீடுகளுக்கு முதல் நூறு யூனிட் மின்சார மானியம் ரத்தாகுமோ என்ற குழப்பமும் இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அரசு என்னென்ன இலவச நடைமுறைகளைப் பின்பற்றுகிறதோ அது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என மின் வாரியம் உறுதியளித்தது.

அதன்பின் மின் நுகர்வோர் ஆர்வமாக தங்கள் ஆதார் எண்ணைமின் இணைப்புடன் இணைக்கத் தொடங்கினர். ஆனால், மின் வாரியம் ஆதார் எண் இணைப்புக்காக வழங்கிய (https://nsc.tnebltd.gov.in/adharupload/) என்ற இணைய தளத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதாகவும், ஆதாரை இணைத்த பின்னரும் இணைக்கவில்லை என்ற தவறான தகவல் வருவதாகவும் மின்நுகர்வோர் புலம்பினர்.

இதற்கிடையே மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 90.69 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தகவல் வெளியிட்டார். பலரும் இன்னும் இணைக்காத நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு மின் நுகர்வோரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதிகாரிகள் அளிக்கும் தவறான புள்ளி விவரங்களை அமைச்சர் தெரிவித்தாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இப்பிரச்சினை குறித்து மின்நுகர்வோர் கூறியதாவது: ஆதார் எண்ணை இணைக்கும் மின்வாரிய இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது. இதை வாரியமே ஒப்புக்கொண்டு மீண்டும் ஆதாரை இணைக்கும்படி அறிவிப்பு வெளியிட்டது. ஆதாரை இணைத்தோருக்கு இணைக்கவில்லை என்றும், உங்கள் செல்போனை அப்டேட் செய்யுங்கள் என்றும், செல்போனை அப்டேட் செய்ய முயன்றால் ஏற்கெனவே அப்டேட் செய்யப்பட்டுள்ளதாகவும் மாறி, மாறி குழப்பும் குறுந்தகவல்கள் வருகின்றன.

ஒரு ஆதார் எண்ணை ஓர் இணைப்பில் மட்டுமே இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதிலும் குழப்பம் நடந்தது. சொந்த வீட்டுக்கு உரிமையாளரின் ஆதாரை இணைக்க முடியவில்லை. வாடகைதாரர் என்று குறிப்பிட்டு இணைக்க வேண்டிய கட்டாயமும் எழுந்தது.

தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் (multiple owners) என்பதை கிளிக் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு பிரச்சினையின் வீரியத்தைப் பொருத்தே குளறுபடிகளுக்கு தீர்வு காண முடிகிறது.

ஏற்கெனவே இணைத்தும், இணைக்கவில்லை என்று தகவல் வருகிறதே என்று கேட்டால், மீண்டும் பதிவு செய்யுங்கள் என்று மின்வாரிய அலுவலர்கள் கூறுகின்றனர். மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து இணைத்தால் பிரச்சினை இருக்காது எனவும் தெரிவிக்கின்றனர்.

சிறப்பு முகாம்களுக்குச் சென்று ஆதாரை இணைத்தோருக்கும், இன்னும் ஆதார் இணைக்கவில்லை என்ற குறுந்தகவல் வருகிறது. பிப்.15 வரை அவகாசம் வழங்கினாலும் பல லட்சம் பேர் இணைக்க முடியாத நிலைதான் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின்வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சர்வர் பழுதாகியிருக்கும்போது சிலர் ஆதார் எண்ணை இணைத்திருப்பார்கள். அதுவும் இணைத்துவிட்டதாக தகவல் காட்டியிருக்கும். சர்வர் சரியான பின்னர் அந்த இணைப்பு ரத்தாகியிருக்கும். இந்தப் பிரச்சினை டிசம்பர் கடைசிவாரம் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் சரி செய்யப்பட்டது. இன்னும் சென்னையில் சில பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

வீட்டு உரிமையாளர் என்றுகூறி ஆன்லைனில் பதிவு செய்து இருப்பார்கள். ஆனால், நேரடி ஆய்வில் அவர் வாடகைக்கு குடியிருப்பது தெரிந்துவிடும். அந்தநேரத்தில் வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அந்தப் பதிவை ரத்து செய்து இருப்பார்கள். இந்த பிரச்சினைகள் தொடக்கத்தில் நடந்தன. தற்போது எளிமையாக அனைவரும் ஆதார் எண்ணை இணைக்கிறார்கள். இணைக்காதோரின் வீடுகளைப் பட்டியல் எடுத்து, ஊழியர்களே வீடு வீடாகச் சென்று இணைக்கிறார்கள்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x