Last Updated : 10 Feb, 2023 07:27 AM

 

Published : 10 Feb 2023 07:27 AM
Last Updated : 10 Feb 2023 07:27 AM

சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது பாதை திட்டம்: 2023 - 24 நிதியாண்டில் ரூ.97 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னை கடற்கரை-எழும்பூர் (4.3 கி.மீ.) 4-வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு 2023-24-ம் நிதியாண்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பணிகளை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் மிக முக்கியமான புறநகர ரயில் வழித்தடமாக தாம்பரம்- சென்னை கடற்கரை வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 3 பாதைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஒரு பாதையில் விரைவு ரயில்கள் அல்லது சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 4-வது ரயில் பாதை இல்லாத காரணத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்குரயில்களை குறிப்பிட்ட நேரத்தில்இயக்கவோ இயலாத நிலை உள்ளது. இதுதவிர, வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால், சென்ட்ரல் ரயில் நிலையம்எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்கு கூட்டத்தைக் குறைக்கும் நோக்கில், தாம்பரத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க புதிய பாதை தேவைப்படுகிறது.

எனவே, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கப் பயணிகள் நெடுங்காலமாகக் கோரிக்கை வைத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4-வது புதியபாதை அமைக்க ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது.

மேலும், ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு செய்து புதிய பாதைக்கு மண் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இருப்பினும், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் காரணமாக, பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கடற்கரை-எழும்பூர் 4-வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தஆண்டு நிதி ஒதுக்கீட்டை விடதற்போது நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதால், இத்திட்டத்தை துரிதமாகசெயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வரதன் அனந்தப்பன் கூறும்போது, ``சென்னை கடற்கரை-எழும்பூர் 4-வது பாதை அமைக்கப் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை விரைவாக முடித்து, திட்டப்பணியைத் தொடங்க வேண்டும்'' என்றார்.

தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர்கூறும்போது, ``சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே மின்மயமாக்கலுடன் 4-வது திட்டத்தை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இத்திட்டத்தில் கூவம் ஆறு பகுதியில் பாதை அமைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற பாதுகாப்புத் துறை, ரிசர்வ் வங்கியிடம் நிலத்தைப்பெற வேண்டியுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாதுகாப்புத் துறையுடன்பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

திட்ட மதிப்பீடு ரூ.274.20 கோடி: சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.274.20 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கு 2020-21-ம் நிதியாண்டில் நிதி ஒதுக்கவில்லை. இதன்பிறகு, 2021-22-ல் ரூ.5 கோடியும், 2022-23-ல் ரூ.54 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. 2023-24-ம் நிதியாண்டுக்கு ரூ.96.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x