Published : 09 Feb 2023 06:45 PM
Last Updated : 09 Feb 2023 06:45 PM

சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்பு: அரசு தகவல்

கோப்புப்படம்

சென்னை: சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்புள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகள் கொள்முதல் செய்யும் டெண்டரில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, எந்தெந்த வழித்தடங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் 130 கிராம வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த சாலைகள் குறுகலாக இருப்பதால் தாழ்தள பேருந்துகளை இயக்கினால் பேருந்துகள் கடுமையாக சேதமடைய வாய்ப்புள்ளது.

அதேபோல சென்னையில் சுரங்கப்பாதை வழியாக 173 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வழித்தடங்களில் 100 சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்கினால் மழை காலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோன்று மினி பேருந்துகள் இயக்கப்படும் 74 வழித்தடங்களிலும், மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் 186 வழித்தடங்களிலும் தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை. 342 தாழ்தள பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை தோராயமாக 65 வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாழ்தள பேருந்துகள் இயக்க முடியாத வழித்தடங்களில் மனுதாரரகள் தரப்பு உள்ளிட்டோரை இணைத்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x