Last Updated : 09 Feb, 2023 06:10 PM

1  

Published : 09 Feb 2023 06:10 PM
Last Updated : 09 Feb 2023 06:10 PM

புதுச்சேரியில் ரேஷன் கடை, மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி மீது மார்க்சிஸ்ட் விமர்சனம்

புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

புதுச்சேரி: “ரேஷன் கடையை திறப்பது மற்றும் மாநில அந்தஸ்து தருவது போன்ற கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மத்திய அரசை கண்டித்து முதல்வர் ரங்கசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், அவர் இரட்டை வேஷம் போடுகிறார் என்றுதான் அர்த்தம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன், சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதையடுத்து ஜி.ராமகிருஷ்ணன் கூறியது: ''புதுச்சேரி மாநிலத்தில் பாஜக – என்ஆர் காங்., கூட்டணி அரசு கல்வியை தனியார் மயமாக்குவதற்கு வேகமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. கடந்த 2010-11ல் 440 அரசு பள்ளிகள் இருந்தது. 2021-22ல் 422 ஆக குறைந்து, 18 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் வருமானம் இல்லாததால் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு வந்துள்ளார்கள்.

இவ்வாறு சேர்ந்த மாணவர்களை விரட்டி மீண்டும் தனியார் பள்ளிக்கு செல்லும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அரசு பள்ளிகள் மூடல், மதிய உணவு சரியில்லாதது, சீருடை தராதது, போதிய ஆசிரியர்கள் இல்லாதது போன்ற நடவடிக்கைகளை இக்குழந்தைகளை தனியாரை நோக்கி தள்ளுகிறது. அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்துள்ளது. இப்பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பதில் சொல்லவில்லை.

2014-ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது அதானியின் சொத்து மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடி. இப்போது அதானியின் மொத்த சொத்து ரூ.10 லட்சம் கோடி. உச்ச நீதிமன்றம் மேர்பார்வையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தினால் மத்தியில் யார், யார் ஆட்சியில் அதானிக்கு உதவிகள் கிடைத்தன என்ற முழு விவரமும் தெரியவரும்.

கார்ப்பரேட் நலனுக்கான நடத்தக்கூடிய இந்த அரசானது, மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடிய வகையில் பட்ஜெட்டில் நிதியை குறைத்திருப்பதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் வரும் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை போராட்டங்கள் நடத்த உள்ளோம். புதுச்சேரியில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

ரேஷன் கடையை திறப்பது மற்றும் மாநில அந்தஸ்து தருவது போன்ற கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மத்திய அரசை கண்டித்து முதல்வர் ரங்கசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், அவர் இரட்டை வேஷம் போடுகிறார் என்றுதான் அர்த்தம்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x