Published : 09 Feb 2023 06:04 PM
Last Updated : 09 Feb 2023 06:04 PM

பிப்.14-ஐ ‘மாடு அணைப்பு நாள்’ என்பது அறிவுக்கு பொருந்தாத அறிவிப்பு: இந்திய கம்யூ. விமர்சனம்

பசு மாடுகள் | பிரதிநிதித்துவப் படம்

சென்னை: "காதலர் தினத்தை இழிவு செய்யும் வகையில் இந்திய விலங்குகள் நல வாரியம் “மாடு அணைப்பு நாளாக” கடைப்பிடிக்குமாறு அறிவித்திருப்பதையும், அறிவுக்கு பொருந்தாத இந்த அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசின் கால்நடைத் துறை அமைச்சகத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது" என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "இந்திய விலங்குகள் நல வாரியம் வரும் 14-ஆம் தேதியை மாடு அணைப்பு நாளாக (Cow hug day) கடைப்பிடிக்குமாறு அறிவித்திருப்பது அறிவார்ந்த செயல் அல்ல. அது ஒன்றிய அரசின் கால்நடைத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் வெளியாகியிருப்பது வெட்கக்கேடானது.

மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பை கொண்டாடும் தினமாக, ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மனிதர்கள் பாகுபாடு இல்லாமல், வேறுபாடு காட்டாமல் சகவாழ்வு மேற்கொள்வதை வலுப்படுத்தும் நிகழ்வாகவே “காதலர் தினம்“ கருதப்படுகிறது.

சாதிய அடுக்குமுறை சமூகத்தை திருத்தி, மாற்றியமைக்க சாதி, மத மறுப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என அறிஞர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். “ஆதலினால் காதல் செய்வீர், ஜெகத்தீரே” என மகாகவி பாரதியார் அழைப்பு விடுத்தார். மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கி கிடக்கும் மனித சமூகத்தை, அறிவியல் பாதைக்கு உயர்த்திச் செல்லும் பகுத்தறிவை ஊக்கப்படுத்த வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டம் வலியுறுத்துகிறது.

இவற்றுக்கு எதிராக காதலர் தினத்தை இழிவு செய்யும் வகையில் இந்திய விலங்குகள் நல வாரியம் “மாடு அணைப்பு நாளாக” கடைப்பிடிக்குமாறு அறிவித்திருப்பதையும், அறிவுக்கு பொருந்தாத இந்த அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசின் கால்நடைத் துறை அமைச்சகத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இந்திய விலங்குகள் நல வாரியம் தனது அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x