Published : 09 Feb 2023 03:46 PM
Last Updated : 09 Feb 2023 03:46 PM
கும்பகோணம்: “தமிழகத்தில் 93 சதவீதமுள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களே இல்லை என்றால், வேலை இல்லாத திண்டாட்டம் பெருகும்” என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் தஞ்சாவூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக கெளரவத் தலைவரும், எம்எல்ஏவுமான ஜி.கே.மணி சிறப்புரையாற்றினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, ''கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நிறுவனர் ராமதாஸ், தமிழைத் தேடி என்ற தலைப்பில் 8 நாட்கள் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை உலகத் தாய்மொழி தினமான வரும் 21-ம் தேதி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி, வரும் 28-ம் தேதி அன்று மதுரையில் நிறைவு செய்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் தமிழறிஞர்களின் சிறப்புரைகள், இசைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
தமிழகத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் தமிழ் குறித்து ஒரு பாடம் கூட இல்லாததால், எழுதப் படிக்கத் தெரியாமல் பட்டம் பெறுகின்ற நிலை உள்ளதை மாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் எதிலும் தமிழ் எங்கும் என அனைத்திலும் தமிழ் வேண்டும் என்பதே இப்பரப்புரையின் நோக்கமாகும்.
இங்கு தமிழில் பெயர்ப் பலகை எழுத வேண்டும் என அரசாணை இருந்தும் தற்போது நடைமுறையில் இல்லை. தமிழகத்தில் உள்ளவர்கள், பல மொழிகளில் கற்றுக்கொள்வது தவறில்லை. ஆனால், தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்.
இதேபோல் இங்குள்ள வேலைவாய்ப்பில் 80 சதவீதத்தினை, தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும். மத்திய அரசின் வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் 93 சதவீதமுள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களே இல்லை என்றால், வேலை இல்லாத திண்டாட்டம் பெருகும். தற்போது காவிரி டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதலில் நிறைய பிரச்சினைகள் உள்ளன'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT