Published : 09 Feb 2023 02:50 PM
Last Updated : 09 Feb 2023 02:50 PM

அண்ணா சாலை விபத்து எதிரொலி: சென்னையில் இனி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகே கட்டிடங்களை இடிக்க அனுமதி

சென்னை அண்ணா சாலையில் கட்டிட விபத்து ஏற்பட்ட பகுதி.

சென்னை: அண்ணாசாலை விபத்து எதிரொலியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு கட்டிடங்களை இடிக்க அனுமதி அளிக்க வேண்டும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் சென்னை அண்ணா சாலையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சுரங்கப் பாதைக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணியின் போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரியா என்ற பெண் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கட்டிட இடுபாடுகளுக்குள் சிக்கிய பிரியாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி பிரியா உயிரிழந்தார்.

இது தொடர்பாக பேசிய மேயர் பிரியா, "இனிவரும் காலங்களில் கட்டிடம் இடிக்கும்போது மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை நேரில் ஆய்வு செய்வார்கள்” என்று தெரிவித்தார். இதன்படி, இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அனைத்து பொறியியல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இதன் விவரம்:

  • கட்டிடம் இடிக்கும் பணியை தொடங்குவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிமையாளர்கள் செய்ய வேண்டும்.
  • பேரிகார்டுகள், அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை வாசகங்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
  • இந்தப் பணிகளை முடித்த பிறகு கட்டிடத்தின் உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
  • அடுத்த 3 நாட்களுக்குள் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
  • பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
  • அருகே உள்ள கட்டிடங்கள் சேதம் அடையாதவாறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தால் கட்டிடம் இடிக்கும் பணியை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.
  • கட்டிடம் இடிப்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பணிகளை தொடங்கினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x