Published : 27 May 2017 10:51 AM
Last Updated : 27 May 2017 10:51 AM
சென்னையிலிருந்து கர்நாடகா, கேரளாவுக்கு செல்லும் விரைவு ரயில்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என, ‘தி இந்து உங்கள் குரல்’ சேவையில் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த வாசகர் ரவிச் சந்திரன் என்பவர் புகாரை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “சென்னை சென்ட் ரலில் இருந்து பெங்களூரு, மங்களூரு, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு தினந்தோறும் விரைவு மற்றும் பாசஞ்ஜர் என பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.
குறிப்பாக, சென்னை சென்ட்ரலிலிருந்து பெங்களூரு வரை செல்லும் லால்பாக், பிருந்தா வனம், அரக்கோணம் பாசஞ்சர், இன்டர்சிட்டி, ஆலப்புழா ஆகிய ரயில்களில் தண்ணீர் வசதி இல்லை. இதனால், கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.
பெங்களூரு வரை செல்லும் விரைவு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிலையங்களில் குடிநீர் வசதியில்லை. மாறாக, ரயில்வே உணவகங்களில் குடிநீர் பாட்டிலை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறைந்த நேரத்தில் நிறைவான பயணம் என்பதால் தான், பெரும் பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால், இதுபோன்ற வசதி குறைவுகளால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களிலிருந்து, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங் களுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் அதிகளவில் கடத்தப்படுகின்றன.
பொது வகுப்புப் பெட்டி மட்டுமின்றி முன்பதிவுப் பெட்டிகளில் கூட ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரயில் நிலையங்களில் நிற்கும் 5 நிமிடங்களில் 20 முதல் 40 மூட்டைகள் வரை ஏற்றப்படுகின்றன. ரயில் பெட்டியில் உள்ள கழிப்பறைகளில் அரிசி மூட்டைகளை அடுக்கி வைக்கின்றனர். இதனால், அந்த கழிப்பறையை பயணிகள் பயன்படுத்த முடியவில்லை.
ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாரும், ரயில்வே போலீ ஸாரும் இதனை கண்டு கொள்வதில்லை. பெயரளவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யும் போலீஸார், அரிசி கடத்தும் நபர்கள் யாரென அடையாளம் தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இது போன்ற குறைகளைத் தவிர்த்து, பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ரயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும்” என்றார்.
இதுகுறித்து ரயில்வே போலீ ஸாரிடம் கேட்டபோது, “சென்னையி லிருந்து கர்நாடகா மற்றும் கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் தினந்தோறும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதி களில் அடிக்கடி ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகிறோம். இதுதொடர்பாக, சிலரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து கடத்தலில் ஈடுபடுவோரை கண்டறிந்து குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்துள்ளோம்.
ரயில் நிலையங்களிலிலும், ரயில் களிலும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம்தான் செய்துதர வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT