

காஞ்சி / செங்கல்பட்டு: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தை காஞ்சிபுரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் செங்கையில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத்தும் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த 2-ம் கட்ட திட்டத்தின் மூலம் இரு மாவட்டங்களிலும் 3,072 மாணவிகளுக்கு உயர்கல்வி நிதியாக தலா ரூ.1000 வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திட்டத்தை தொடங்கி வைத்துஅமைச்சர் உதயநிதி பேசும்போது, இந்த திட்டத்தின் மூலம் 70,282 மாணவிகளுக்கு ரூ.70 கோடி தற்போது வழங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு மிக முக்கியமானது கல்வி. அதற்கான அனைத்து உதவிகளும் தமிழக அரசால் செய்யப்படும் என்றார்.
இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்கட்ட திட்டத்தில் 3,917 மாணவிகளுக்கும் தற்போது தொடங்கப்பட்ட 2-வதுகட்ட திட்டத்தில் 1,341 மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கப் பட்டுள்ளது. விழாவில் அமைச் சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, எம்எல்ஏ செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் நரிக்குறவ மக்களின் உற்பத்தி பொருட்களை விற்பதற்காக ஒதுக்கப்பட்ட கடையை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். முன்னதாக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளையும் உதயநிதி தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தை ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கி பேசும்போது, "மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் முதற்கட்டத்தில் 2,875 மாணவிகளுக்கும் தற்போது 2-ம் கட்டத்தில் 1,731 மாணவிகளுக்கும் அவர்களது வங்கி கணக்கில் தலாரூ.1000 நேரடியாக உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ பாலாஜி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, மாவட்ட சமூக நல அலுவலர் ச.சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.