Published : 09 Feb 2023 06:24 AM
Last Updated : 09 Feb 2023 06:24 AM
கரூர்: ஊராட்சி வார்டு தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண்களுக்கு தேர்தல் நடத்தி வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுத்த விவகாரத்தில் தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலரை நிரந்தர பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று உத்தரவிட்டார்.
2019-ல் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலின்போது, கரூர் மாவட்டம்கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவி, பொது (பெண்கள்) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு தேர்தல்நடத்தும் அலுவலராக அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் நா.வெங்கடாசலம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உதவியாளர் கே.சிவக்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.
ஆனால், வேட்பு மனுக்களை பெறும்போது, பொது(பெண்கள்) பிரிவினருக்கு பதிலாக பொதுப் பிரிவினருக்கு என தவறுதலாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு, உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின், மாநில தேர்தல் ஆணைய ஆய்வின்போது, இந்த தவறு நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, தேர்தல் பணியில்கவனக்குறைவாக செயல்பட்டதற்காக தேர்தல் அலுவலர் நா.வெங்கடாசலம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கே.சிவக்குமார் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்டு, விசாரணை அறிக்கை பெறப்பட்டது. அதன்பின், மாவட்ட ஆட்சியரும் நேரடி விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து, 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி மாநில தேர்தல் ஆணைய செயலாளருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சிஅலுவலராக பணியாற்றி வந்த நா.வெங்கடாசலம், நுகர்பொருள் வாணிப கழக சென்னை தெற்கு மண்டலத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே.சிவக்குமார் ஆகியோரை அரசுப் பணியிலிருந்து நிரந்தர பணி நீக்கம் செய்து கரூர் ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT