Last Updated : 09 Feb, 2023 12:32 PM

 

Published : 09 Feb 2023 12:32 PM
Last Updated : 09 Feb 2023 12:32 PM

தேனி அருகே அணுகு சாலை இல்லாததால் புறவழிச்சாலையை அடைய 4 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் கிராம மக்கள்

பிரதிநிதித்துவப் படம்

தேனி: தேனி பூதிப்புரம் சாலையின் குறுக்கே திண்டுக்கல் - குமுளி புறவழிச் சாலை மேம்பாலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு அணுகு சாலை அமைக்காததால் இங்குள்ள 7 கிராம மக்கள் 4 முதல் 7 கி.மீ. சுற்றிச் சென்று இந்த புறவழிச் சாலைக்கு வர வேண்டிய நிலை உள்ளது.

தேனி - கம்பம் சாலையின் கிளைப் பாதையில் இருந்து 6 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது பூதிப்புரம். இந்த பேரூராட்சியைச் சுற்றிலும் ஆதிபட்டி, பூதிப்புரம் மஞ்சநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி, சின்னம்மாள்புரம், வலையபட்டி, வாழையாத்துப்பட்டி உள்ளிட்ட 7 கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தேனி - பூதிப்புரம் சாலையின் குறுக்கே ஆதிபட்டி எனும் இடத்தில் திண்டுக்கல் - குமுளி புறவழிச் சாலை அமைக்கப்பட்டது. இதற்காக இங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு புறவழிச் சாலை வாகனங்கள் மேல் பகுதியிலும், பூதிப்புரம் சாலையில் செல்லும் வாகனங்கள் அதன் கீழும் கடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டன.

இதனால் இப்பகுதிபுறவழிச் சாலை மிக உயரமாக அமைந்துவிட்டது. ஆனால் இக்கிராம மக்கள் புறவழிச்சாலையில் பயணிக்கும் வகையில் அணுகு சாலை அமைக்கவில்லை. இதனால் ஆதிபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் தேனி வந்து தேனி - பெரியகுளம் புறவழிச் சாலையிலோ அல்லது தேனி - போடி சாலையில் உள்ள போடேந்திரபுரம் பகுதிக்கு 4 கி.மீ. தூரம் சென்றோ இந்த புறவழிச் சாலையில் பயணிக்க வேண்டியுள்ளது.

இதேபோல் மற்ற கிராம மக்களும் 4 முதல் 7 கி.மீ. வரை சுற்றிச் சென்று புறவழிச் சாலையை சென்றடைகின்றனர். தங்கள் ஊர் அருகே அமைந்துள்ள புறவழிச் சாலையில் வெளியூர் மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் எளிதாக பயணம் செய்வதை இக்கிராம மக்கள் வேடிக்கை பார்க்கும் நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

புறவழிச் சாலை அமைக்கப்பட்டபோது பாலத்தையொட்டிய பகுதியில் ஏராளமான லாரிகள் கட்டுமானப் பொருட்களை கொண்டு சென்றன. அந்த மண் தடத்தில் தற்போது இரு சக்கர வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் 2 கி.மீ. தூரம் பயணித்து புறவழிச் சாலையை அடைகின்றன. எனவே, பாலத்துக்கு அடியில் அணுகு சாலை அமைக்க வேண்டும் என்று 7 கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து பூதிப்புரத்தைச் சேர்ந்த உதயகுமார் கூறுகையில், புறவழிச் சாலையை இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்தவர்களால் எளிதில் பயன்படுத்த முடியவில்லை. எந்த பக்கம் சென்றாலும் 4 முதல் 7 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.

மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவையை கருதி புறவழிச் சாலைக்கு அணுகு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x