Published : 29 May 2017 12:04 PM
Last Updated : 29 May 2017 12:04 PM

மாட்டு இறைச்சி தடைக்கு எதிராக சென்னையில் 31-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாட்டு இறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக 31-ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

’’இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் வகையில், மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாட்டு இறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தி.மு.கழகம் தனது எதிர்ப்பினைத் தொடக்கத்திலேயே பதிவு செய்தது. மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம், நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, அரசியல் சாசனத்தால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தையும் மறுக்கும் விதத்தில் மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.

தனி மனித சுதந்திரத்துடன் இணைந்த பல அம்சங்களில் விவசாயிகளின் நலனும் இதில் முக்கியமானதாக அமைந்துள்ளது.

மாட்டு இறைச்சிக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையால் இந்தியா முழுவதும் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்துப்போய், விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பவை கால்நடைகளே.

தங்களின் பிள்ளைகள்போல ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை கிராமப்புற விவசாயிகள் வளர்ப்பதும், விவசாயம் கைகொடுக்காத நிலையில், அந்தக் கால்நடைகள் தங்களை வளர்த்த விவசாயிகளின் குடும்பத்திற்குப் பொருளாதார ரீதியாகத் துணை நிற்பதும் காலங்காலமாகத் தொடர்ந்து வருகிற வேளாண்மை சார்ந்த பண்பாடாகும். இந்தப் பண்பாட்டை சீரழிக்கும் வகையிலும், விவசாயிகள் மீது பொருளாதாரச் சுமையை மேலும் ஏற்றி, அவர்களின் தற்கொலையை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், மத்திய அரசின் மாட்டு இறைச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

தொடர்ந்து தீவனம் அளிக்க பொருளாதாரச் சூழல்கள் இடங்கொடுக்காத நிலையில், நான்கு முறை கன்று ஈன்ற பசுக்கள், வயது முதிர்ந்த காளைகள், உடல்நலனில்லாத கால்நடைகள் இவற்றை நல்ல முறையில் விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் புதிய கால்நடைகளை வாங்கி, பலன் பெறும் நடைமுறை எல்லா கிராமங்களிலும் நிலவுகிறது. இது தனி மனித வருவாயாக மட்டுமில்லாமல் வேளாண்மைத் துறையின் மரபு சார்ந்த சுழற்சி முறையாகவும் அமைந்துள்ளது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாத மத்திய அரசின் புதிய அறிவிப்பினால், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை உரிய முறையில் விற்க முடியாத அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். புதிய கால்நடைகளையும் அவர்களால் வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற மாட்டுச் சந்தைகளில் ஒன்றான அந்தியூர் சந்தையில் நேற்றைய தினம் (28-5-2017) குறைந்த அளவே மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாகனங்களில் மாடுகளை ஏற்றிவர, மத்திய அரசின் அறிவிப்பு தடையாக இருப்பதால், விவசாயிகள் 25 கி.மீ. தொலைவுக்கு மாடுகளுடன் நடந்தே வந்துள்ளனர்.

அப்படியிருந்தும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் விவசாயிகளிடம் ஏற்படுத்தியுள்ள அச்சத்தின் காரணமாக மாட்டுச் சந்தையில் வணிகம் சரியாக இல்லை என்று பாதிப்படைந்துள்ள விவசாயிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல தமிழக விவசாயிகளின் நிலையை அந்தியூர் சந்தை எடுத்துக் காட்டியுள்ளது.

கிராமப் பொருளாதாரம், மரபு சார்ந்த வேளாண்மை இவை குறித்த அக்கறையின்றி மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையும், அதற்கு அண்டை மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு வாய் மூடி மௌனம் காப்பதும் விவசாயிகளின் நலனைப் பெரிதும் பாதிப்பதுடன், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான உணவு உரிமையும் பறிக்கப்படுகிறது.

இதனைக் கண்டித்து மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வருகிற 31-5-2017 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x