Published : 16 May 2017 11:17 AM
Last Updated : 16 May 2017 11:17 AM

சர்க்கரை நோயுடன் பிறந்த பச்சிளம் குழந்தை: 5 லட்சம் பிரசவத்தில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் அபூர்வ நோய்

3 லட்சம் முதல் 5 லட்சம் பிரசவத்தில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் ‘நியோனேட்டல் டயோபெட்டிக் மில்லிட்டஸ்’என்ற சர்க்கரை நோயுடன் பிறந்த பச்சிளம் குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறது.

குறைப் பிரசவம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நந்தினி. இவர் களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வதாக பிறந்த ஆண் குழந்தை குறைப் பிரசவத்துடன், கடந்த மார்ச் 22-ம் தேதி 1.2 கிலோ எடையுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் பிறந்தது.

சர்க்கரை அளவு 500

பொதுவாக குழந்தைகள், பிறக்கும்போது அவற்றின் சர்க்கரை அளவு 60 முதல் 70 மில்லி கிராம் இருக்க வேண்டும். ஆனால், இந்த குழந்தை பிறக்கும்போதே சர்க்கரை அளவு 500 முதல் 600 மில்லி கிராம் வரை இருந்துள்ளது. மேலும், எடை குறைவாகவும் பிறந்ததால் இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது சிரம மாக இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் குழந்தையின் சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை செலவானது.

அதற்கு மேல் சுரேஷ் குடும்பத்தினரால் செலவு செய்ய முடியாததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து ள்ளனர். அரசு மருத்துவர்கள், இந்தக் குழந்தையின் உயிரை தற்போதுவரை காப்பாற்றியதோடு, சர்க்கரையின் அளவைக் குறை த்துள்ளனர். ஆனால், தொடர்ந்து இக்குழந்தையின் சர்க்கரை அளவை சராசரி நிலையில் வைத் திருப்பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.

அரிதான குறைபாடு

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் மதியரசன், பச்சிளம் குழந்தைகள் துறை துணைப் பேராசிரியர் முத்துகுமரன் ஆகியோர் கூறியதாவது;

பிறக்கும்போதே அல்லது 6 மாதத்துக்குள் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வந்தால் இந்த நோயை நியோனேட்டல் டயோபெட்டிக் மெல்லிட்டஸ் (Neonatal diabetes mellitus) என குறிப்பிடுவார்கள். 3 லட்சம் முதல் 5 லட்சம் பிரசவங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு பிறக்கும்போதே இந்த சர்க்கரை நோய் வருகிறது.

தினமும் இன்சுலின்

குழந்தைகளுக்கு இந்த சர்க்கரை நோயை குணப்படுத்துவது மிகுந்த சிரமம். வாழ்நாள் முழுவதும் இந்த குழந்தைகளுக்கு இந்நோய் இருந்துகொண்டே இருக்கும். அப்படியொரு இக்கட்டான நிலையில், இந்த குழந்தை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற பெரியவர்களுக்கு போடு வதுபோல் தினமும் தொடர்ச்சியாக இன்சுலின் ஊசி போட வேண்டும். 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். ஏப்ரல் 10-ம் தேதி அரசு மருத்துவமனையில் இந்த குழந்தை சேர்க்கப்பட்டது. தற்போது 200 கிராம் எடை கூடியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இங்கிலாந்துக்கு சென்ற ரத்த மாதிரி

குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உடற்கூறு குறைபாடுகளாலும், சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் மரபணு குறைபாடுகளாலும் ஏற்படுகின்றன. உடற்கூறு குறைபாடுகளால் இந்த நோய் வந்திருந்தால் தொடர்ந்து சிகிச்சையளித்தால் ஏதாவது ஒரு கட்டத்தில் இன்சுலின் சுரந்து சரியாக வாய்ப்புள்ளது.

ஆனால், மரபணு குறைபாடுகளால் இந்த நோய் குழந்தைகளுக்கு வந்தால் இதைக் குணப்படுத்த வாய்ப்பே இல்லை. சர்க்கரை நோய்களுக்கு உடற்கூறு குறைபாடா என்பதைக் கண்டறிய முக்கிய மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கண்டுபிடித்துவிடலாம். ஆனால், மரபணு குறைபாடா என்பதைக் கண்டுபிடிக்க இந்தியாவிலேயே பரிசோதனை கிடையாது. அந்தளவுக்கு மருத்துவ பரிசோதனை இங்கு முன்னேறவில்லை.

இங்கிலாந்தில் மட்டுமே இதுபோன்ற ஆய்வுக்கூடங்கள் உள்ளன. சர்க்கரை நோய் ஏற்பட்ட இந்திய குழந்தையின் ரத்த மாதிரியை எடுத்து அனுப்பவும், திரும்பப் பெறவும் ஆவதற்கான செலவை மட்டும் செய்தால் போதும். இங்கிலாந்தில் இந்த பரிசோதனைகள் இலவசமாகவே செய்து கொடுக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில்தான், இக்குழந்தை பிறந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், இக்குழந்தையின் ரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பியுள்ளது. இதில் சில பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. இன்னும் சில அபூர்வமான மரபணு சோதனை முடிவுகள் வரவுள்ளன. அது வந்த பிறகுதான் சிகிச்சையை தொடர முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x