Published : 27 May 2017 10:04 AM
Last Updated : 27 May 2017 10:04 AM

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு விரைவில் செயலி: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு விரைவில் செயலி அறிமுகம் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் ஓட்டுநர்கள் (பைலட்) தின விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய 46 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கோ, பாதிக்கப் பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காகவோ ஆம்புலன்ஸ் வாகனங் கள் 17 அல்லது 18 நிமிடங்களில் போய் சேருகின்றன. ஆனால், தமிழகத்தில் தகவல் கிடைத்த 15-வது நிமிடங்களில் அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் சென்றுவிடுகிறது.

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான புதிய செயலி (ஆப்) விரைவில் அறிமுகம் செய்யப்படஉள்ளது. ஒரு விபத்தோ, உடல்நலக் குறைபாடோ ஏற்படும்போது, 108 கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பவர்கள் பொதுவாக பதற்றத்தில் இருப்பார்கள். அவர்களால் எந்த இடத்தில் விபத்து நடைபெற்றது என்பது குறித்த தகவல்களை தெளிவாக தெரிவிக்க இயலாது.

ஆனால் இந்த செயலியை ஆன்ட்ராய்டு செல்போன்களில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொண்டால், குறிப்பிட்ட செல்போனை வைத்தே, எந்த இடத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்பதை மிகத் துல்லியமாக அறிய முடியும். இதன் மூலம் அதிவிரைவாக சம்பவ இடத்தைஅடைய முடியும். இந்த செயலியை இன்னும்சில தினங்களில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x