Published : 08 Feb 2023 08:27 PM
Last Updated : 08 Feb 2023 08:27 PM

ஈரோடு கிழக்கு தொகுதியில் ‘சாதி’ அரசியல் எடுபடுமா? - கட்சிகளைக் குழப்பும் புதிய புள்ளிவிவரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களை சாதி ரீதியாக பிரித்து வெளியாகிவரும் புதிய புள்ளிவிவரத்தால் அரசியல் கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கில் ‘சாதி’ அரசியல் எடுபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் என முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் எண்ணிக்கை சுருங்கியுள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பணியாற்ற, பகுதி வாரியாகவும், வாக்குச்சாவடி வாரியாகவும் வாக்காளர்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளனர். அந்தந்தப் பகுதிகளில் தேர்தல் பணிமனை அமைத்து, அப்பகுதி வாக்காளர்களை தினமும் சந்தித்து வாக்கு சேகரிப்பது இவர்கள் பணியாக உள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கில் சாதி வாரியாக உள்ள வாக்குகள் தொடர்பாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தொடர்ந்து உலா வரத் தொடங்கியுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்களில், ஒவ்வொரு சாதிக்குமான வாக்கு சதவீதம் ஏறியும், இறங்கியும் இருப்பதால், எது உண்மையான புள்ளிவிபரம், இது வாக்குப்பதிவில் எதிரொலிக்குமா என தேர்தல் பணிக்கு வந்துள்ள வெளிமாவட்ட அரசியல் பிரமுகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில், கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில், செங்குந்த முதலியார் சமுதாயம் பெரும்பான்மை சமுதாயமாக உள்ளது என அனைத்து புள்ளிவிவரம் கூறுகின்றன. அடுத்தது கொங்கு வேளாளக் கவுண்டர் மற்றும் இஸ்லாமியர், கிறிஸ்த்துவர் அடங்கிய சிறுபான்மை பிரிவு வாக்கு சதவீதத்தை ஒவ்வொரு புள்ளிவிவரமும் கூட்டியும், குறைத்தும் காட்டுவதால் அரசியல் கட்சியினர் குழம்பி வருகின்றனர்.

இவர்கள் தவிர அருந்ததியர் 6 சதவீதமும், செட்டியார், நாயுடு, நாயக்கர், பிள்ளை, வன்னியர், முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், நாடார், பிராமணர் உள்ளிட்ட பிரிவினர் 1 சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை பல்வேறு நிலைகளில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதோடு, இந்தி பேசும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 3 சதவீதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி நகரம் சார்ந்த தொகுதி என்பதால், சாதி ரீதியாக வாக்குகள் பதிவாகாது என்ற கருத்தும் நிலவுகிறது. புள்ளி விவரங்களின்படி, செங்குந்த முதலியார் சமுதாயம் இத்தொகுதியில் அதிகமாக இருந்தாலும், பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக ஆகியவை அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை. நாம் தமிழர் கட்சி மட்டும் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவில், சாதி ரீதியான அம்சங்கள் எதிரொலிக்குமா என முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் கேட்டபோது, “ஈரோடு கிழக்கு தொகுதி கைத்தறி நெசவாளர்களை அதிகம் கொண்ட தொகுதியாக முன்பு இருந்தது. அப்போது முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்தனர். ஆனால் தற்போது, கடைகள் மற்றும் மஞ்சள் மண்டி நடத்துவோர், சிறுபான்மையினர், ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் வடமாநிலத்தவர் என பலரும் வசிப்பதால், ‘காஸ்மாபாலிடன் தொகுதியாக’ மாறிவிட்டது.

எனவே, சாதி ரீதியான வாக்குப்பதிவு இங்கு எடுபட வாய்ப்பில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக ஆட்சியின் பிரதிபலிப்பு தேர்தலில் எதிரொலிக்கும். எனவே, தேர்தல் முடிவு திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x