Published : 08 Feb 2023 11:27 AM
Last Updated : 08 Feb 2023 11:27 AM
சென்னை: ஆவின் காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
திருப்பூர், காஞ்சிபுரம்-திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 236 பேர் நேரடியாகப் பணியில் அமர்த்தப்பட்டனர்.
மேலாளர்கள் (கணக்கு, விவசாயம், பொறியியல், தீவனம், பால்பண்ணை மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் துணை மேலாளர்கள் (கணினி, பால்வளம் மற்றும் சிவில்), தொழில்நுட்பவியலாளர்கள் (குளிர்பதனம் மற்றும் கொதிகலன்), இளநிலைப் பொறியாளர், தொழிற்சாலை உதவியாளர்கள், ஓட்டுநர்கள் பணியிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்தப் பணியிடங்களில் தகுதியில்லாத பலரும் நியமனம் செய்யப்பட்டு, விதிகளை மீறி வேலை வழங்கப்பட்டதாக ஆவின் நிர்வாகத்துக்குப் புகார்கள் வந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில் 2021 ஜூலையில், அப்போதைய ஆவின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமையிலான குழுவினர், பணி நியமன முறைகேடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், விதிமுறைகளை மீறி பணியில் சேர்ந்ததாக, மேலாளர்கள், துணைமேலாளர்கள் உள்ளிட்ட 236 பேர் கடந்த ஜனவரி மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய ஆவின் நிறுவனத்தில் உள்ள 26 வகையான 322 காலிப் பணியிடங்களை இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT