Published : 08 Feb 2023 04:18 AM
Last Updated : 08 Feb 2023 04:18 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது - மனுக்கள் இன்று பரிசீலனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. நிறைவு நாளான நேற்று அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மற்றும் 36 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 37 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர், அமமுக, அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உட்பட நேற்று முன்தினம் வரை 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று, அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் தாக்கல் செய்தார். இதில், ‘இரட்டை இலை’ சின்னத்தை ஒதுக்குவதற்கான படிவமும் இடம்பெற்றிருந்தது.

அவருடன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம், தமாகா இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா ஆகியோர் உடன் இருந்தனர். பாஜக உள்ளிட்ட இதர கூட்டணி கட்சியினர் இதில் பங்கேற்கவில்லை.

தென்னரசுவுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி பத்மினி தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார். நிறைவு நாளான நேற்று மட்டும் 36 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 96 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (8-ம் தேதி) நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலை3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கஉள்ளது.

‘குக்கர்’ கிடைக்காததால் அமமுக வாபஸ்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிடுவார் என்று பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, வேட்பாளர் சிவபிரசாந்த் கடந்த 3-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சின்னம் தொடர்பாக அமமுக சார்பில் கடந்த மாதம் 27, 31-ம் தேதிகளில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் 7-ம் தேதி (நேற்று) பதில் அளித்துள்ளது. அதில், பதிவு செய்யப்பட்ட கட்சியான அமமுகவுக்கு கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தலில் ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஓராண்டு காலத்துக்குள் வரவுள்ள சூழலில், புதிய சின்னத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும், என்ற கட்சி தலைமைநிர்வாகிகளின் ஆலோசனையை கருத்தில் கொண்டு, இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x