Published : 08 Feb 2023 04:03 AM
Last Updated : 08 Feb 2023 04:03 AM
கோவை: ஆயிரம் ஆண்டுகள் பழமையான 112 கோயில்களை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
கோவை பேரூர் பட்டீசுவரர் கோயில் யானை கல்யாணியின் பயன்பாட்டுக்காக, அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் கோயில் அருகே ராட்சத குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேலும், யானை நடைப்பயிற்சி மேற்கொள்ள 300 மீட்டர் நீளத்துக்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திறந்துவைத்தார். தொடர்ந்து, பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில், அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் படித்து தீட்சை பெற்ற 84 பேருக்கு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் சிவதீட்சை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக கோயில்களில் மொத்தம் 29 யானைகள் உள்ளன. அதில் 27 யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் குளியல் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 509 கோயில்களை கணக்கெடுத்துள்ளோம். இவற்றை புனரமைக்க முதல் கட்டமாக முதல்வர் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதில், 112 கோயில்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழநி கோயிலுக்கு பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. பழநி கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருப்பவர்களும் பாராட்டும் வகையில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது.
அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அர்த்தமற்ற செய்தியை வெளியிட்டது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா, இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் கருணாநிதி, அறங்காவலர் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT