Published : 08 Feb 2023 04:00 AM
Last Updated : 08 Feb 2023 04:00 AM
கோவை: பழநி கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழநி தண்டாயுதபாணி கோயிலில் கடந்த ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது.
திருக்கோயில் சீரமைப்பு பணிகள், திட்டமிடப்பட்ட கட்டுமானப் பணிகள் முடிவதற்கு முன்பாகவே, அவசர அவசரமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆகம விதிகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், அதிகாரிகளும் என்ன சொன்னார்களோ அதுவே நடந்துள்ளதாகவும், பழநி மக்களும், பக்தர்களும் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
கும்பாபிஷேகத்துக்கு முதல்நாள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும், துறை அதிகாரிகளும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் பழநி கோயில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியையும், தாங்க முடியாத மன வேதனையையும் அளிக்கிறது. இது அப்பட்டமான ஆகம மீறல். அது மட்டுமல்ல, இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல்.
எனவே, இதற்காக, முருக பக்தர்களிடம் பகிரங்கமாக அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். இனி இதுபோன்ற ஆகம மீறல்கள் நடக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்துக்களின் உணர்வுகளை மதித்து, ஆகம விதிகளைப் பின்பற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும். பழநி கோயிலில் பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT