Published : 08 Feb 2023 07:22 AM
Last Updated : 08 Feb 2023 07:22 AM

செயல்பாடுகள், சிகிச்சை அளிப்பதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதலிடம்: சேலம் மருத்துவமனைக்கு 2-ம் இடம், கோவைக்கு 3-ம் இடம்

சென்னை: செயல்பாடுகள், சிகிச்சை அளிப்பதில் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தரம் மற்றும் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக மாதந்தோறும் அதற்கான தரவரிசையை மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதத்துக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் சாந்திமலர் அண்மையில் வெளியிட்டார். அதில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முதலிடத்தையும், சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாமிடத்தையும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

அனைத்து செயல்பாடுகள் மதிப்பீடு: கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து முதலிடத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாகிகள் கூறியதாவது: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கை வசதிகள், சிகிச்சை முறைகள், இறப்பு விகிதம், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் எண்ணிக்கை, அறுவை சிகிச்சைகள், மகப்பேறு மற்றும் அவசர சிகிச்சைகள் எனஅனைத்து நிலையிலான செயல்பாடுகளையும் மருத்துவக் கல்வி இயக்ககம் மதிப்பீடு செய்கிறது.

அதேபோல், தமிழகம் முழுவதும்உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் மதிப்பீடுசெய்து தரவரிசையாக வெளியிடும்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது. அடுத்து வரும் மாதங்களில் ஆராய்ச்சி, கல்வி நடவடிக்கைகளையும் மதிப்பீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x