Published : 07 Feb 2023 08:57 PM
Last Updated : 07 Feb 2023 08:57 PM
மதுரை: சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் 2 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை முதல் உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகளை விசாரிக்கின்றனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முதல் அமர்வில் பொதுநல வழக்குகள், ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் ஜெ.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் ஆள்கொணர்வு மனுக்கள் மற்றும் குற்றவியல் ரிட் மனுக்களையும் விசாரித்து வந்தனர்.
இந்த அமர்வுகள் இன்று முதல் மாற்றியமைக்கப்படுகிறது. முதலாவது அமர்வில் நீதிபதி ஆர்.விஜயகுமாருக்கு பதிலாக நீதிபதி எல்.விக்டோரியா கவுரியும். 2வது அமர்வில் நீதிபதி சுந்தர்மோகனுக்கு பதிலாக நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரும் பணிபுரிவர். அமர்வு பணி முடிந்து தனி விசாரணையின் போது நீதிபதி விக்டோரியா கவுரி பழைய உரிமையியல் சீராய்வு மனுக்களையும், நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பழைய குற்றவியல் மனுக்கள் (சிஆர்பிசி பிரிவு 407, 482-ன் கீழ் தாக்கலாகும்) மற்றும் ரிட் மனுக்களை (சிஆர்பிசி) விசாரிப்பர்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் (2020 முதலான), பி.புகழேந்தி (2016 முதல் 2019 வரையிலான), கே.குமரேஷ் பாபு (2015 வரையிலான) கனிமம் மற்றும் சுரங்கம், நில சீர்த்திருத்தம், நில வாடகை, நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல், தகவல் உரிமை சட்டம், தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களை விசாரிக்கின்றனர்.
நீதிபதி ஆர்.விஜயகுமார், உரிமையியல் சீராய்வு மனுக்கள், கம்பெனி மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி சுந்தர்மோகன், 2017 ஆண்டு முதலான 2வது மேல்முறையீடு மனுக்களை விசாரிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT