Published : 07 Feb 2023 06:38 PM
Last Updated : 07 Feb 2023 06:38 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு குவிந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி சிராஜ்பூர் நகரில் காலியாக இருந்த இடங்களில் சிலோன்காலனி, நாஞ்சிக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த பின்தங்கிய வகுப்பினர் கடந்த 3-ம் தேதி காலை திடீரென 500-க்கும் மேற்பட்டோர் கயிறு, கம்புகளைக் கொண்டு தற்காலிகமாக கொட்டகைகளை அமைத்தனர். இதையடுத்து, தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல் துறையினர் குவிக்கப்பட்டு கொட்டகை அமைத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கொட்டகை அமைத்தவர்கள் “இந்த இடம் அரசு புறம்போக்கு இடம். எனவே எங்களுக்கு இந்த இடத்தில் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோட்டாட்சியர் “பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம், அதுவரை அங்கு யாரும் கொட்டகை அமைக்கவும், வசிக்கவும் கூடாது” என உத்தரவிட்டார். இதையடுத்து அத்துமீறி கொட்டகை அமைத்தவர்கள் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து சிராஜ்பூர் நகரில் இரவு - பகலாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிராஜ்பூர் நகர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோட்டாட்சியர் எம்.ரஞ்சித் பேசுகையில், ”சிராஜ்பூர் நகர் இடம் அரசு புறம்போக்கு அல்ல, அது தனியாருக்குரிய பட்டா இடம், எனவே அங்கு யாரும் கொட்டகை அமைக்க கூடாது” என்றார்.
இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த நிர்வாகிகள், “அப்படியென்றால், பின்தங்கிய வகுப்பினருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை வேறு ஒரு இடத்திலாவது வழங்க வேண்டும் என்றனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோட்டாட்சியர் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்த 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அதற்கான மனுவை வழங்கினர். எல்லோரும் ஓரே நேரத்தில் மனு கொடுக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து கோட்டாட்சியர் எம்.ரஞ்சித்திடம் கேட்டபோது, "நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் சிராஜ்பூர் நகரில் உள்ள இடம் தனியாருக்கு சொந்தமான இடம், அது அரசு புறம்போக்கு இடமல்ல. அங்கு யாரும் அத்துமீறி கொட்டகை அமைக்கக் கூடாது, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேறு எங்காவது வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment