Published : 07 Feb 2023 04:32 PM
Last Updated : 07 Feb 2023 04:32 PM
புதுச்சேரி: “முதல்வருக்கு சங்கடம் வரும்போது மட்டும் மாநில அந்தஸ்தை பற்றி பேசுவார் என்று கூறுகின்றனர். இந்த முதல்வருக்கு எந்தச் சங்கடமும் இல்லை” என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 13-ம் ஆண்டு தொடக்க விழா இசிஆர் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. கட்சி மாநில செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். கட்சியின் நிறுவனத் தலைவரும், புதுச்சேரி மாநில முதல்வருமான ரங்கசாமி கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் தேசிய தலைவர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசியது: “அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆட்சி அமைப்பிலும், எதிர்க்கட்சியாகவும் இருந்து தற்போது பாஜக, அதிமுக கூட்டணியுடன் இணைந்து பலமான கட்சியாக இருந்து ஆட்சி செய்து வருகிறது.
கடந்த ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது நாம் நிறைவேற்றி வருகிறோம். அனைத்து சமுதாய மக்களுக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர்களுக்கு ரூ.500 உயர்த்தப்பட்டு உள்ளது. புதிதாக 26,800 பேருக்கு முதியோர் உதவித் தொகை இந்த ஆட்சி பொறுப்பேற்றுவுடன் வழங்கப்பட்டுள்ளது. இலவச அரிசி வழக்குவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் அதற்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான சைக்கிள், லேப்டாப், சீருடை ஆகியவை வருகிற சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள் வழங்கப்படும். சீருடை வழங்க தரமான துணியை தேர்வு செய்ய கோப்புகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து தொகுதிகளிலும் மேம்பாட்டு பணிகள் சிறப்பாக நடத்தப்படும்.
நகரப் பகுதியில் உப்பு கலந்த குடிநீர் வருவதாக கூறுகின்றனர். அவர்களுக்கு தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.300 கோடி செலவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஆறாம் வகுப்பு ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
உதவியாளர் யுடிசி, எல்டிசி உள்ளிட்ட அரசு பணிகளுக்கான தேர்வுகள் விரைவில் நடத்தப்படும். சேதராப்பட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட நிலம் தற்போது நம்மிடம் வந்துள்ளது. அங்கு புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மத்திய அரசு சிறப்பாக நிதி உதவி செய்து வருகிறது.
கட்சியின் முதல் கொள்கையாக மாநில அந்தஸ்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை சில அரசியல் காட்சிகள் முதல்வருக்கு சங்கடம் வரும்போது மட்டும் மாநில அந்தஸ்தை பற்றி பேசுவார் என்று கூறுகின்றனர். இந்த முதல்வருக்கு எந்தச் சங்கடமும் இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கும், இருந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும். மாநில அந்தஸ்து மத்திய அரசு கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நலிவடைந்த நிறுவனங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு திறக்க முடியாத நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். லாபகரமாக இருந்த நிறுவனங்களை கடந்த ஆட்சியில் வீணாக்கி விட்டனர். புதுச்சேரியில் மக்கள் மீது வரிச் சுமைகளை திணிக்காமல் வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி விற்பனை வரி, கலால் வரி உள்ளிட்ட கூடுதல் வரிகள் மூலம் மாநில வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில வருவாயை உயர்த்தியும் மத்திய அரசின் உதவியோடும் சிறப்பான ஆட்சியை செய்து வருகிறோம். மத்திய அரசின் உதவியோடு மத்திய அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கட்சி கட்டமைப்புகளை மேம்படுத்த கட்சி பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்” என்று முதல்வர் ரங்கசாமி பேசினார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், முன்னாள் வாரிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...