Published : 07 Feb 2023 01:34 PM
Last Updated : 07 Feb 2023 01:34 PM
கும்பகோணம் திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 70 நாட்களாக ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்குப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கக் கிளை துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன், துணைச் செயலாளர் சரபோஜி, ஆலைப் பிரிவுச் செயலாளர் நாக.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில் கூறியது: ”போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் குறித்து தமிழக அரசு கண்டுகொள்ளாததால், இன்று முதல் 15-ம் தேதி வரை கபிஸ்தலம் முதல் ஆடுதுறை வரையுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தோறும் தெருமுனைக் கூட்டம் நடத்தி, தமிழக அரசு அலட்சியப்படுத்தி வருவதையும், மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததையும், ஆலையின் அவலங்களையும், விவசாயிகளின் வேதனைகளையும் கிராமங்களிடையே எடுத்துக் கூறவுள்ளோம்.
மேலும், அண்மையில் நள்ளிரவில், திமுக மற்றும் அதிமுக கட்சிக் கொடியுடன், ஆலைக்குள் சென்ற கார் சில மணி நேரத்திற்கு பிறகு திரும்பிச் சென்றது. விவசாயிகளை ஏமாற்றிய ஆலை நிர்வாகத்திற்கு துணைபோகிறார்கள் எனத் தெரிய வருகிறது.
இது குறித்து அந்தந்த கட்சித் தலைமை விசாரணை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கட்சியினரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், எங்களுக்கு சாதகமாக இருப்போம் எனக் கடந்த ஆட்சிக் காலத்தில் வாக்குறுதியளித்த திமுகவும், தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக பிரமுகர்களும் இப்போராட்டம் குறித்துப் பேசாதது, விவசாயிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.
பின்புலம் என்ன? - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், அப்பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் கரும்பு வழங்கியதற்கான தொகையை வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் ஆலை நிர்வாகம் வாங்கிய கடனை தள்ளுபடி செய்து, அவர்களை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுபட வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT