Published : 07 Feb 2023 12:44 PM
Last Updated : 07 Feb 2023 12:44 PM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் 

வேட்புமனு தாக்கல் செய்த தென்னரசு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று (பிப்.7) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு கடந்த 31-ம் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார், வேட்பாளர்களிடம் மனுக்களைப் பெற்று வருகிறார். முதல் நாளில் 4 சுயேச்சை வேட்பாளர்களும், இரண்டாம் நாளில், தேமுதிக வேட்பாளர் ச.ஆனந்த் உள்ளிட்ட 6 வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்தனர். பிப்ரவரி 2-ம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 10 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 3-ம் தேதி, திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த், அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் உட்பட 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 4-ம் தேதி 10 சுயேச்சை வேட்பாளர்களும், நேற்று (பிப்.6) நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் உட்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 59 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று (பிப்.7) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (பிப்.7) கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (பிப்.8) நடக்கவுள்ளது. வரும் 10-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x