Published : 07 Feb 2023 06:57 AM
Last Updated : 07 Feb 2023 06:57 AM

நோய்களை துல்லியமாக கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அப்போலோ மருத்துவமனையில் அறிமுகம்

சென்னை: நோய்களை துல்லியமாகக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அப்போலோ மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.

அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் மருத்துவர் பிரதாப் சி.ரெட்டி, தனது 90-வது பிறந்த நாளை கடந்த 5-ம் தேதி கொண்டாடினார். அப்போது, நோய்களைத் துல்லியமாகப் பகுப்பாய்ந்து கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு மருத்துவ நுட்பத்தை (கிளினிக்கல் இன்டெலிஜன்ஸ் என்ஜின்) அவர் அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

சுனாமியைப் போன்ற பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சர்க்கரை நோய், இதய பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றை முறையாகக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கவும் இந்த நவீனக் கட்டமைப்பு உதவியாக இருக்கும்.

அப்போலோ மருத்துவமனையின் 40 ஆண்டுகால மருத்துவத் தரவுகளையும், அறிக்கைகளையும், சிகிச்சை நுட்பங்களையும் உள்ளீடு செய்து, அதனடிப்படையில் நோயின் தன்மையைப் பகுப்பாய்வு செய்யும் நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பொறியாளர்கள், ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் ஒருங்கிணைந்து இதை வடிவமைத்துள்ளனர்.

நோயாளிகளின் அறிகுறிகளை அந்த நுட்பத்தில் உள்ளீடு செய்தால், இதுவரை உள்ள தரவுகள் மற்றும் பரிசோதனை தகவல்களின் அடிப்படையில் நோய்களைக் கண்டறிந்து, செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் தகவல்கள் அளிக்கப்படும்.

தற்போது அந்த நுட்பத்தை அப்போலோ மருத்துவர்கள் 4 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து மருத்துவர்களும் இந்த தொழில்நுட்பத்தை அப்போலோ இணையதளத்தில் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போலோ மருத்துவக் குழும இணை மேலாண் இயக்குநர் சங்கீதா ரெட்டி மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x