Published : 07 Feb 2023 06:51 AM
Last Updated : 07 Feb 2023 06:51 AM

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டம்: இடத்தின் பரப்பு விவரத்தை பதிவுத் துறையிடம் பெற அறிவுறுத்தல்

சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் விண்ணப்பத்துடன் வரைபடம் மற்றும் இடத்தின் பரப்பு குறித்த உண்மைத் தன்மையை பதிவுத் துறையிடம் பெற வேண்டும் என நகர ஊரமைப்பு இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை பதிவு செய்யக் கூடாது என்று கடந்த 2016-ல் பதிவுத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனை வாங்கியவர்களின் நலனைக் காக்கவும், அந்த மனைப்பிரிவுகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிக்கவும், கடந்த 2017-ம் ஆண்டு மனைகள் வரன்முறைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மனைகள் வரன்முறைப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், விண்ணப்பங்களை பரிசீலிப்பதை பொறுத்து, கூடுதலான வழிகாட்டுதல்களை நகர ஊரமைப்புத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் நகர ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை பொறுத்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைகளின்படி வரன்முறைப்படுத்தி உத்தரவு வழங்கப்படுகிறது.

இந்த அரசாணைகளின்படி கடந்த 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதிக்கு முன்னதாக அனுமதியற்ற மனைப்பிரிவு அமைக்கப்பட்டதை நிரூபிக்கும் வகையில், அம்மனைப்பிரிவில் உள்ள ஏதேனும் ஒரு மனை விற்பனை செய்யப்பட்டதற்கான பத்திரப்பதிவுத் துறையின் முத்திரையிடப்பட்ட மனைப்பிரிவு வரைபடம் இணைக்கப்பட்டுள்ள கிரயப்பத்திரம் பெற்று அதைப் பரிசீலிப்பது நடைமுறையில் உள்ளது.

மனைப்பிரிவு வரைபடத்தின் நகல் மட்டும் விண்ணப்பத்துடன் பெறப்படுவதால், அந்த மனைப்பிரிவின் உண்மையான பரப்பு குறித்து அறிய இயலாமல் மனுதாரரால் கூடுதலாக பரப்பு சேர்க்கப்பட்டு கூடுதல் பரப்புக்கும் வரன்முறைப்படுத்தும் நிலை உள்ளது.

இதைத் தவிர்க்க, வருங்காலங்களில் பெறப்படும் விண்ணப்பத்துடன் இணைத்து பெறப்படும் 2016 அக்.20-ம் தேதிக்கு முந்தைய மனைப்பிரிவு வரைபடம் இணைக்கப்பட்ட கிரயப்பத்திர நகலை பத்திரப்பதிவுத் துறைக்கு அனுப்புதல் அல்லது அந்த மனைப்பிரிவின் இதர விவரங்களைப் பத்திரப்பதிவுத் துறைக்கு அனுப்புதல் வேண்டும்.

மேலும், அந்த மனைப்பிரிவு 2016 அக்.20-ம் தேதிக்கு முன் எவ்வளவு பரப்பில் அமைந்திருந்தது என்பதன் உண்மைத்தன்மை குறித்து சார்-பதிவாளரிடம் விவரம் பெற்று, அதன்பின் அனுமதியற்ற மனைப்பிரிவு விண்ணப்பத்தைப் பரிசீலிக்க வேண்டும். அந்த விவரங்களுடன் மட்டுமே தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x