Published : 07 Feb 2023 06:43 AM
Last Updated : 07 Feb 2023 06:43 AM

வசதிகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களது படிப்புக்கேற்ற வசதிகள் இல்லை என்று கூறி, அங்கு பணியாற்ற முடியாது என மருத்துவர்கள் மறுப்புத் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், 19 முதுநிலை மருத்துவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் பணியில் சேருமாறு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 ஆண்டுகளுக்கு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்த மருத்துவர்கள் ஹரி விக்னேஷ், ஸ்ருதி உள்ளிட்ட 19 பேர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய வசதிகள் இல்லை என்று கூறி, அங்கு தாங்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், மருத்துவப் படிப்பில் நிபுணத்துவம் பெற்ற தங்களை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும், எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களை நியமித்திருப்பது தவறானது என்றும் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், மனுதாரர்களில் 8 பேர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், எஞ்சிய 11 பேர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கலந்தாய்வின்போது அவர்கள் தேர்வு செய்த இடங்களில்தான் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, மருத்துவ மேற்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசு அதிகம் செலவு செய்கிறது. அதற்குப் பிரதிபலனாக, மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் இந்த சமுதாயத்துக்கு சேவைபுரிய வேண்டும் என்பதற்காகத்தான் 2 ஆண்டுகள் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையே விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை முதுநிலை மருத்துவர்கள் இலவசமாக செய்வதில்லை. ஊதியம் பெற்றுக் கொண்டுதான் செய்கின்றனர்.

ஏழை மக்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், தங்களது படிப்புக்கு ஏற்ற வசதி, வாய்ப்புகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை என்று கூறி, அங்கு பணியாற்ற முடியாது என மனுதாரர்கள் மறுப்புத் தெரிவிக்க முடியாது.

மருத்துவ நிபுணர்களின் சிறப்பு சிகிச்சை, கிராம மக்களுக்கு அவசியம் கிடைக்க வேண்டும். மருத்துவர்களை பொதுமக்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கக்கூடிய நிலையில், அவர்கள் தங்களது பொன்னான நேரத்தை இதுபோல வழக்குத் தொடர்ந்து வீணடிக்கக் கூடாது. எனவே, மனுதாரர்கள் 19 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வரும் 10-ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மருத்துவர்களை பொதுமக்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கக்கூடிய நிலையில், அவர்கள் தங்களது பொன்னான நேரத்தை இதுபோல வழக்கு தொடர்ந்து வீணடிக்கக் கூடாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x