Published : 07 Feb 2023 06:06 AM
Last Updated : 07 Feb 2023 06:06 AM

புதுக்கோட்டை | ஆவுடையார் கோவில் அருகே புத்த சமய தர்ம சக்கர தூண் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே தொண்டைமானேந்தல் பகுதி யில் கண்டெடுக்கப்பட்ட புத்த சமய தர்மச்சக்கர தூண்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே தொண்டைமானேந்தல், புதுவாக்காடு ஊருணிக் கரையில் புத்த சமயச் சின்னமான தர்மச் சக்கரத் தூண் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுவாக்காடு ஊரணிக்கரையருகே நிலத்தை சீர் செய்யும்போது தர்மச் சக்கர சிற்பத்துடன் சுமார் 2 அடி உயரத்தில் கல் தூண் வெளிப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர் எக்ஸ்.எடிசன் மற்றும் புதுவாக்காடு கிராம இளைஞர்கள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்துக்கு தகவல் அளித்தனர். தர்மச்சக்கரம், புத்த சமயத்தில் மிக முக்கிய சின்னமாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியது: தர்மச் சக்கரம் அல்லது அறவாழி என்பது புத்தம், சமணம் மற்றும் வைணவ மதங்களில் முக்கியச் சின்னமாக உள்ளது. தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ள தர்மச் சக்கரம் 8 ஆரங்களுடன் ஒரு தாங்கியில் வைக்கப்பட்டிருப்பது போன்று பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாங்கிப் பலகையில் சக்கரத்தின் அடிப் பகுதியில், தெளிவற்ற நிலையில் மான் உருவமும், மையத்தில் விளக்கு அமைப்பும் காட்டப்பட்டிருக்கிறது. இது, புத்ததர்மச் சக்கரத்தோடு தொடர்புடையது என்பதை வெளிப்படுத்துகிறது.

மேலும், சக்கரத்தின் மேல்புறமாக ஒரு ஒளிக்கீற்று காட்டப்பட்டிருக்கிறது. இது, புத்தருக்கு காட்டப்படும் ஒரு முக்கியமான அடையாளமாகும். வைணவ சக்கரங்களில் இந்த தீச்சுவாலை அமைப்பு 3 புறங்களில் காட்டப்படும்.

சிற்பத்தில் தெளிவான காலவரையறையைக் கொண்ட எழுத்து பொறிப்புகள் ஏதுமில்லாவிட்டாலும், 9-ம் நூற்றாண்டு தொடங்கி 11-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகக் கருதலாம். தர்மச் சக்கரத்தின் 8 ஆரங்கள் கூறும் தத்துவம் என்னவெனில், சரியான உயிரோட்டமான வாழ்க்கை, சரியான பார்வை மற்றும் முயற்சி, கவனம், நோக்கம், நினைவாற்றல், செயல், பேச்சு என்பதாகும்.

புத்தர் முதன்முதலில் சாரநாத்தில் மான் பூங்காவில், 5 துறவிகளுக்கு உபதேசம் செய்த நிகழ்ச்சிதான் முதல் தர்மச் சக்கர சுழற்சியாக கொள்ளப்படுகிறது. இதைக் குறிக்கும் வகையிலே, தர்மச் சக்கரத்தின் இரு புறமும் மான்கள் காணப்படுகிறது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தர்மச் சக்கரத் தூண் நீர் நிலைக்கு அருகில் கிடைத்துள்ளதால், மக்களுக்காக இந்நீர்நிலையை ஏற்படுத்தியவர்களால் நடப்பட்டிருக்கலாம் என கருத முடிகிறது. மேலும், இதுபோன்ற அடையாளத் தூண்கள் நிலங்களின் எல்லைகளை குறிப்பதற்கும், தாம் செய்வித்த பொதுப்பணியை, எந்நோக்கத்துக்காக செய்தோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், நட்டுவிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.

இது பவுத்த துறவிகள் அல்லது அந்த மதத்தைப் பின்பற்றியவர்கள் இப்பகுதியில் இருந்திருப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது. கடற்கரை அருகே அமைந்துள்ள கிராமமாகவும் உள்ளது. மேலும், ஆவுடையார்கோவில் பகுதியிலுள்ள கரூர் கிராமத்தில் புத்தர் சிற்பம் உள்ளது. மணமேல்குடி அருகே வன்னிச்சிப்பட்டினத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சிற்பம் இருந்ததை புதுக்கோட்டை வரலாற்று அறிஞர் ஜெ.ராஜாமுகமது கண்டறிந்தார். பின்னர், திருடுபோன அந்த புத்தர் சிற்பம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இங்கிருந்து இலங்கைத் தீவும் அண்மைப் பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் பவுத்தம் பரவியிருந்ததை வெளிப்படுத்தும் சான்றாக இத்தூண் கண்டுபிடிப்பை கருதமுடிகிறது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x