Published : 07 Feb 2023 07:03 AM
Last Updated : 07 Feb 2023 07:03 AM
கோவை: கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு தயாரிப்பதற்கான 120 கிலோ மூலப் பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டன.
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்தாண்டு அக்.23-ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் உக்கடம் போலீஸார் விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 109 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும். இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(28), முகமது தவுபீக்(25), உமர் பாரூக்(39), பெரோஸ்கான்(28) உள்ளிட்ட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நீதிமன்றத்தில் வாக்குமூலம்: கார் வெடிப்பு வழக்கில் உயிரிழந்த ஐமேஷா முபினின் மனைவியிடம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4 -வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதில், பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பாக நீதிபதி ஆர்.சரவணபாபு முன்பு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. முபினின் மனைவியால் பேச முடியாது என்பதால் சைகை மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மறுபுறம் முபினின் வீட்டில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் 120 கிலோ வெடிமருந்து ரசாயன மூலப் பொருட்களை அழிக்கும் பணியை என்ஐஏ அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். சூலூர் அருகேயுள்ள வாரப்பட்டி என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் வைத்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான 120 கிலோ மூலப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
குறிப்பிட்ட அடிக்கு குழி தோண்டி அதில், பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனங்களைக் கொட்டி, மண்ணுடன் கலந்து தீ வைத்து அழிக்கப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அப்போது, என்ஐஏ இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பாண்டே உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT