Published : 06 Feb 2023 06:00 PM
Last Updated : 06 Feb 2023 06:00 PM

கோவை, மதுரையில் ஒரே வழித்தடங்களில் மெட்ரோ ரயில், மேம்பால திட்டங்கள்: மீண்டும் ஆய்வு செய்ய முடிவு  

சென்னை மெட்ரோ ரயில் | கோப்புப் படம்

சென்னை: கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டமும், நெடுஞ்சாலைத் துறையின் மேம்பால திட்டமும் ஒரே வழித்தடத்தில் செல்வதால் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் முழுமையான விவரம்:

கோவை மெட்ரோ ரயில்: கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி செலவும் ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவினாசி சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் கட்டப்படவுள்ளது. நெடுஞ்சாலை வந்தால் இந்த சாலையில் போக்குவரத்து எப்படி இருக்கும் என்பது தொடர்பாக கூடுதலாக ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

மதுரை மெட்ரோ ரயில் : மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் வெளி வீதிகளின் வழியாக செல்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு வெளி வீதிகளின் வழியாக நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டுமான பணிகளால் பாரம்பரிய கட்டுமானங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களின் வழித்தடங்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x