Last Updated : 06 Feb, 2023 03:23 PM

 

Published : 06 Feb 2023 03:23 PM
Last Updated : 06 Feb 2023 03:23 PM

“முந்தைய ஆட்சியரின் பணிகளை முழுமையடையச் செய்வேன்” - தென்காசியின் புதிய ஆட்சியர் உறுதி

தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன்

தென்காசி: "முந்தைய ஆட்சியர் என்னென்ன பணிகளை மேற்கொண்டாரோ, அந்தப் பணிகள் அனைத்தையும் முழுமையடையச் செய்ய நடவடிக்கை எடுப்பேன்" என்று தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள துரை.ரவிச்சந்திரன் உறுதி அளித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தென்காசி மாவட்டத்தில் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயியின் மகன் என்ற முறையில் விவசாயம் குறித்த கோரிக்கைகளை முழு மனதுடன் நிறைவேற்றுவேன். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தகுதியான மக்களுக்கு முறையாக சென்றடைய முழு முயற்சி எடுப்பேன். குற்றாலம் சிறந்த சுற்றுலாத் தலமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

முந்தைய ஆட்சியர் என்னென்ன பணிகளை மேற்கொண்டாரோ, அந்தப் பணிகள் அனைத்தையும் முழுமையடையச் செய்ய நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக எந்த நேரத்திலும் நேரில் வந்து சந்திக்கலாம். அனுமதியின்றி கனிமவளங்கள் கொண்டுசெல்வது, அளவுக்கு அதிகமாக வாகனங்களில் கனிமவளங்களை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். குவாரிகள் முறையாக இயங்குகின்றனவா என்று ஆய்வு செய்யப்படும்.

தென்காசி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாரல் சீசனுக்கு மட்டுமே குற்றாலத்துக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வரும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முந்தைய ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தப் பணிகள் தொடரும். அரசு நிலங்கள், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும். தனியார் அருவிகள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

எம்எஸ்சி, எம்பில் படித்துள்ள ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர். சிவகங்கை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் துணை அட்சியராவும், தூத்துக்குடி, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார். உள்துறை மற்றும் கலால் துறை துணை செயலாளராகவும், எல்காட் நிர்வாக இயக்குநராகவும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலராகவும் பணியாற்றி உள்ளார்.

முன்னதாக, தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ப.ஆகாஷ், தொழிலாளர் நலத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். | தொடர்புடைய செய்திக் கட்டுரை: “எங்க ஆட்சியரை திரும்பக் கொடுங்க...” - உருகும் தென்காசி மக்களுக்கு அப்படி என்ன செய்தார் ஆகாஷ்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x