Published : 06 Feb 2023 12:30 PM
Last Updated : 06 Feb 2023 12:30 PM
சென்னை: மின் இணைப்பு எண், ஆதார் இணைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்னுடன் ஆதாரை இணைப்பதில் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், மின் இணைப்பு எண்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
எந்த ஒரு சீர்திருத்தத்திற்கும் முறையான திட்டமிடலும், காலக்கெடுவும் தேவையாகும். போதிய காலக்கெடு வழங்காமல், நோக்கம் என்ன? என்பதை தெரிவிக்காமல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை மக்கள் மீது திணித்ததன் விளைவு தான் இதுவாகும்.
மின் இணைப்பு எண்களுடன் ஆதாரை இணைப்பதில் எத்தகைய குழப்பங்கள் நடந்துள்ளன? அதற்கான காரணங்கள் என்ன? அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும்? அதை மின்வாரியம் எவ்வாறு சரி செய்யப்போகிறது? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்.
மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்கான நோக்கம் என்ன? என்பதை இப்போதாவது மின்வாரியம் தெரிவிக்க வேண்டும். வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்களை அனுப்பி ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்களைப் பெற்று அவற்றை இணைப்பதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT