Published : 06 Feb 2023 11:17 AM
Last Updated : 06 Feb 2023 11:17 AM

மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்களை இணைத்ததில் குளறுபடி: மின்சார வாரியம் அதிரடி உத்தரவு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்புப் பணி

சென்னை: மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்களை இணைத்ததில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6-ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவ.28-ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர்.

இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை அறிமுகம் செய்தது.

முதலில் டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று (பிப்.6) வரை 97 சதவீத பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையல் மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்களை இணைத்ததில் குளறுபடி நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து மின்சார வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில், "உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காகவே அதிகளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்கள் மூலம் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனவே களப்பணியாளர்கள் இதை கண்கானித்து உரிமையாளர்களின் ஆதார் எண் மட்டுமே இணைக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, பணி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அனைத்து பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு ஆதாரில் உள்ள குளறுபடிகள் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்." இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x