Published : 06 Feb 2023 07:02 AM
Last Updated : 06 Feb 2023 07:02 AM

தமிழக, தேசிய அரசியலை 80 ஆண்டுகளாக நிர்ணயித்த கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியம்: அழகிரி கருத்து

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: தனது 13 வயதில் அரசியலில் பிரவேசம் செய்து 95 வயது வரை தமிழ்ச் சமுதாயத்துக்காக அல்லும் பகலும் அயராது உழைத்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. தனது எழுத்தாற்றல் மூலமாக ஆற்றிய மகத்தான தொண்டைப் போற்றும் வகையில் அவருக்கு சென்னை கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்துக்கு அருகில், கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இம்முடிவை எதிர்த்து அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கடற்கரை மணல் பரப்பிலிருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதால் சுற்றுச் சூழலுக்கு என்ன பாதிப்பு வந்துவிடும் என்று தெரியவில்லை. சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த ஒரு மாதமாக நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள கடற்கரை பகுதியில் அதிகாலையில் ஆய்வு செய்து, அங்கு ஆமைகளோ, மீன்களோ இல்லை என்று அறிக்கை வழங்கியிருக்கிறது.

அனைத்து துறைமுகங்களும் கடலில்தான் அமைந்துள்ளன. இதைப் பார்த்தும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ஏறத்தாழ 10 மைல் தொலைவுக்கு கடலில்தான் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள ஏன் மறுக்கிறார்கள்?

இந்தியாவில் முதன்முறையாக கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் புதுச்சேரி அரசால் அமைக்கப்பட உள்ளது. மும்பை மரைன் டிரைவ் கடற்கரையிலிருந்து ஒன்றரை கி.மீ. உள்ளே அரபிக் கடலில், மராட்டிய அரசு சார்பில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு பிரம்மாண்டமான நினைவிடம் அமைக்கப்படுகிறது. இவற்றால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?

தமது கடுமையான உழைப்பினால் 80 ஆண்டுகால தமிழக, தேசிய அரசியலை நிர்ணயித்த ஒரு வித்தியாசமான தலைவருக்கு வித்தியாசமான வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைத்து சிறப்புச் செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x