Published : 06 Feb 2023 06:46 AM
Last Updated : 06 Feb 2023 06:46 AM
சென்னை: சென்னையில் கடந்த 2 வாரங்களில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.1 கோடியே 68 லட்சத்து 98,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்து, விபத்து உயிரிழப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மது குடித்துவிட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அபராதத் தொகை அதிகமாக இருப்பதால் பலர் அதைச் செலுத்துவதில்லை. அதன்படி 8,227குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்தன. இதையடுத்து, சென்னையில் 12அழைப்பு மையங்களை போக்குவரத்து போலீஸார் நிறுவி அதன் மூலம் நிலுவை அபராதத்தை செலுத்தும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரில் வரவழைத்தும் எச்சரிக்கப்பட்டனர்.
அதன்படி, கடந்த வாரம் அழைப்பு மையங்களின் இதேபோன்ற நடவடிக்கைகளால் 785 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.81 லட்சத்து 85,500 அபராத தொகை வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களில் நிலுவையில் இருந்த மது போதையில் வாகனம் ஓட்டிய 1,628 வழக்குகள் அழைப்பு மையங்கள் மூலம் தீர்க்கப்பட்டு, ரூ.1 கோடியே 68 லட்சத்து 98,500 அபராம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், ``மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, மற்ற அசையும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். ஏற்கெனவே, இதுபோன்று மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு இதுவரை 319 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளன'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT