Published : 06 Feb 2023 06:24 AM
Last Updated : 06 Feb 2023 06:24 AM
சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் உள்ள பயிற்சி மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக தினமும் பயிற்சி செய்யும் வீரர், வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள பயிற்சி வசதிகள் குறித்துகேட்டறிந்தார்.
குத்துச்சண்டை அரங்கம்: நேரு விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச்சண்டை அரங்கைப் பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி, கூடுதல் வசதிகள் மற்றும் உபகரணங்களின் தேவைகுறித்து கேட்டறிந்தார். உடற்பயிற்சிக் கூடம், மாணவ-மாணவியர் தங்கும் விடுதி மற்றும் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து பழைய கட்டமைப்புகளை நவீன வடிவமைப்புடன் சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கழிப்பிட வசதி: மேலும் கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிட வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து முறையாகப் பராமரிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, துறையின் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT