Published : 05 Feb 2023 07:17 PM
Last Updated : 05 Feb 2023 07:17 PM

ஈரோடு தேர்தல் | வேட்பாளர் அறிவிப்பில் அவைத் தலைவர் செயல் சட்டவிரோதமானது: ஓபிஎஸ் தரப்பு

வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி (பிப்.27) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். முன்னதாக சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவருடன் சந்திப்பு நிகழ்த்தினர்.

பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர முன்கூட்டியே அவைத்தலைவர் முடிவு செய்தது தவறு. உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் வேட்பாளரை பொதுக் குழு கூடி தேர்வு செய்யலாம் என்றே தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பட்டியலை பொதுக்குழு உறுப்பினர்கள் முன்பாக வைத்து அவர்களுடைய வாக்குகளை பெற வேண்டும் என்றே உச்ச நீதிமன்றமும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஆனால், தமிழ்மகன் உசேன் பொது வாக்கெடுப்பு போல் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரே ஒரு வேட்பாளரை அறிவித்துவிட்டு அந்த வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா? என்று கேட்டிருக்கிறார். இதன்மூலம் தமிழமகன் உசேன் ஏற்கனவே ஓரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. அப்படியென்றால் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை தமிழ்மகன் உசேன் நிராகரிக்கிறாரா. வேட்பு மனுவே தாக்கல் செய்யாத தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவைத் தலைவரின் சட்டவிரோதமான செயலுக்கு நாங்கள் இணங்க மாட்டோம்" என்றார்.

முன்னதாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் அனுமதித்து அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதன்பிறகே வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த ஆலோசனைக்குப் பின்னரே இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓபிஎஸ் தரப்பினர் அவைத் தலைவருடன் உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x