Published : 27 May 2017 11:09 AM
Last Updated : 27 May 2017 11:09 AM
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாண்டுகளை கடந்துள்ள நிலையில், அந்த அரசு தன்னை முடியாட்சி அரசாக அறிவித்து கொள்ளாதது மட்டுமே எஞ்சியிருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்தியில் பாஜகவின் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோடியின் இந்த ஆட்சி, பல சாதனைகளைச் செய்திருப்பதாகப் பெருமையடித்து ஹைடெக் பரப்புரைகளிலும் விளம்பரங்களிலும் ஈடுபட்டிருக்கிறது.
ஆனால் இது ஏற்புடையதுதானா என்று உரசிப் பார்க்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமக்களின் கடைமையும் பொறுப்பும் ஆகும். அதிலும் தமிழர்களாகிய நமக்கு மோடியின் ஆட்சியை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றே ஆகியிருக்கிறது.
ஏனென்றால் இந்த மூன்றாண்டு கால ஆட்சியில் மோடி தன் அதிகார பலம் முழுவதையும் தமிழர்களுக்கு எதிராகவே திருப்பினார். மக்களாட்சி நெறிகளுக்கு மாறாக மன்னராட்சி – முடியாட்சி – என்றே சொல்லும்படியாக அனைத்தும் சர்வாதிகார நடவடிக்கைகளையே தமிழகத்தில் அவர் மேற்கொண்டார்.
பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி நாடு இந்தியா. பல மொழி இன மாநிலங்கள்தான் இந்தியாவே தவிர, இந்தியா என்ற வெறும் பெயரின் அதிகாரத்திற்குட்பட்டவை அல்ல மாநிலங்கள். ஆனால் இந்த பன்மைத்துவத்தை ஏற்காத பாசிச மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறார் மோடி.அதனால்தான் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதாக வழக்கொழிந்து போன சமஸ்கிருத மொழியையும் அதன் வழிப்பட்ட பழமைவாத பிற்போக்கு கலாச்சாரத்தையும் மற்ற மொழியினர் மீது திணிக்கிறார்.
அதன் மூலம் இந்தியச் சமூகத்தில் மதவாத, வகுப்புவாத பிளவுகளை மேலும் அதிகப்படுத்துகிறார், அகலப்படுத்துகிறார். மோதல்களையும் சாதல்களையும் உண்டுபண்ணுகிறார், உறுதிப்படுத்துகிறார். இதனை இலக்காகக் கொண்டுதான், மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டிருக்கிறார்.
மாநிலத்திற்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களாகப் பார்த்து திணித்துக் கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அனைத்து நதிகளுக்குமாக ஒற்றைத் தீர்ப்பாயத்தை அமைக்க முனைகிறார். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேக்கேதாதுவில் அணை கட்ட ஒப்புதலளிக்கிறார்.பாலாறு, பாவானியாறு அமராவதியாறு ஆகியவற்றில் அண்டை மாநிலங்கள் தடுப்பணை கட்டுவதைத் தடுக்க மறுக்கிறார்.
தமிழகத்தின் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது சரிதான் என்கிறார். தமிழக மீனவரைப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையின் மேல் நடவடிக்கை எடுக்காமல் அதற்கு ஆதரவாகவே செயல்படுகிறார்.தமிழர்களை மீன்பிடி தொழிலிலிருந்தே அப்புறப்படுத்த சிங்கள அரசுடன் சேர்ந்து திட்டமிட்டுக் காய்நகர்த்துகிறார்.
அணு உலை, நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற பேரழிவுத் திட்டங்களை தமிழ்நாட்டில் பார்த்து அமைக்கிறார். தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடமே இல்லாது செய்திருக்கிறார். தமிழர்கள் உயர்கல்வியே கற்கக்கூடாது என்று நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளைப் புகுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்.
வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு போதிய நிதி வழங்காமல் இருக்கிறார். மோடி பதவி ஏற்றதிலிருந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்திவிட்டார். அந்த வகையில் தமிழக மாணவர்களுக்கு இதுவரை 1500 கோடி ரூபாயை தராமல் வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு சார்ந்த திட்டங்களுக்காக தமிழக அரசுக்குத் தர வேண்டிய பணம் ரூ.17,000 கோடியை இன்னும் விடுவிக்காமல் இருக்கிறார். தமிழக விவசாயிகளின் கணக்கில் மத்திய அரசு செலுத்த வேண்டிய கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு பிரிமியம் தொகை ரூ.385 கோடியை இதுவரை செலுத்தவில்லை. அதைச் செலுத்தியிருந்தால் பல விவசாயிகளின் தற்கொலையைத் தடுத்திருக்கலாம். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பண மதிப்பிழப்பை அறிவித்து கூலித் தொழில் செய்து பிழைக்கும் அடித்தட்டு மக்கள், சிறு, குறு தொழில் செய்வோர், சிறு, குறு வணிகர்கள் ஆகியோரையெல்லாம் தண்டனைக்குள்ளாக்கினார்.
அத்தனை பொருட்களுக்கும் ஜிஎஸ்டி அதாவது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு விகிதங்களை அறிவித்திருக்கிறார். ஜூலையில்தான் அமலாக உள்ளது. இருந்தும் பல்வேறு தரப்பினரும் தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிட்டது என்று இப்போதே போராடத் தொடங்கிவிட்டார்கள். மேலும் கொடுமையிலும் கொடுமையாக, என்ன உணவை மக்கள் உண்ண வேண்டும் என்பதையும் தான்தான் தீர்மானிப்பேன் என்பதாக, இறைச்சிக்காக மாடுகளை விற்பதையே தடை செய்து சட்டம் போட்டிருக்கிறார் மோடி.
மாநில உரிமை மீதான அப்பட்டமான இந்தத் தலையீட்டை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேரக் கண்டிக்கின்றன.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசையே முடக்கி செயல்பட விடாமல் வைத்து, தனது சர்வாதிகாரத் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி வருகிறார்.
ஊழலுக்கு எதிரான “லோக்பால்” அமைப்பை மத்தியிலேயே இதுவரை ஏற்படுத்தாதவர்தான் இந்த மோடி! அது மட்டுமா, மத்திய ஆட்சியாளர்களின் ஊழலை மறைக்கும் விதத்தில் “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” சரியானபடி செயல்படாதவாறு அதற்குத் தலைமை ஆணையரையே நியமிக்காமல் முடக்கி வைத்திருப்பவரும்தான் இந்த மோடி! ஒருவன் ஊழல் பேர்வழி என்றால் அவனை அரவணைத்துப் பாதுகாப்பவன் அந்த ஊழலில் பழம் தின்று கொட்டை போட்டவனாகத்தானே இருக்க முடியும்? அவனே முதலாமவனைக் காட்டிலும் கடும் தண்டனைக்குரிய முதன்மைக் குற்றவாளி என்கிறது சட்டமும்.
ஆனால் இதையெல்லாம் ஊடகத்தின் மூலம் மறைத்துவிடும் ஓர் அபார “வளர்ச்சி” நிலை இங்கு சாத்தியமாகியிருக்கிறது, சாதனையும் ஆகியிருக்கிறது. இந்த அளவுக்கு இந்திய - தமிழக அரசியலின் தரம் தாழ்த்தப்பட்டதற்கு மோடியின் முடியாட்சிதான் காரணம். முடியாட்சி என்று சொல்வதற்குக் காரணம், மோடி ஜனநாயக வழியில் வந்தவருமல்ல, ஜனநாயக வழியை ஏற்பவருமல்ல என்பதாலேயே.
தேர்தலுக்குப் பின் எம்.பிக்கள் பிரதமரைத் தேர்வு செய்வதுதான் இந்திய அரசமைப்புச் சட்ட வழிமுறை. மாறாக தேர்தலுக்கு முன்பே பிரதமர் என்று சொல்லிக் கொண்டு வருவது எப்படி ஜனநாயக வழிமுறையாகும்?சரி. பிரதமர் ஆனபின் மோடி நாடாளுமன்றத்திற்கே வருவதில்லையே? அப்படியென்றால் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு வேலையே இல்லையா? அப்படி வேலை இல்லை என்றால் அந்த நாடாளுமன்றம்தான் எதற்கு? தேர்தல்தான் எதற்கு?பிரதமர் என்பவர்தான் எதற்கு?ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது; தான்தோன்றித்தனம் முடிசூட்டிக் கொண்டது
மூன்றாண்டு கால மோடியின் ஆட்சி முடியாட்சி என அறிவிக்காததுதான் பாக்கி ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும்; தமிழகத்தின் உரிமைகளும் மீட்கப்பட வேண்டும் அதற்குத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT